தமிழகம்

ராணிப்பேட்டை அதிமுக வேட்பாளரின் கிடங்கில் இருந்து ரூ.91.67 லட்சம் பறிமுதல்

செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளைநடைபெற உள்ளதையொட்டி நிறைவுநாள் பிரச்சாரம் நேற்று மாலை 7 மணியுடன் நிறைவுபெற்றது. இந்நிலையில், ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் எஸ்.எம்.சுகுமாரின் கிடங்கு ராணிப்பேட்டை வானாபாடிசாலையில் உள்ளது.

இக்கிடங்கில் ஆந்திராவைச் சேர்ந்த30 இளைஞர்கள் தங்கி இருப்பதாகவும்,அவர்கள் இருசக்கர வாகனங்கள் மூலம்ராணிப்பேட்டை தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கி வருவதாகவும் ராணிப்பேட்டை தேர்தல் நடத்தும் அலுவலர் இளம்பகவத்துக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து இளம்பகவத், ராணிப்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் பூரணி தலைமையிலான பறக்கும் படையினர், மற்றும் போலீஸார் நேற்று முன்தினம் இரவு சுகுமாரின் கிடங்குக்கு சென்றனர்.

அப்போது, கிடங்கின் சுற்றுச்சுவர் மீது ஏறிய இளைஞர் ஒருவர் கீழே குதித்து அதிகாரிகளைக் கண்டதும் தப்பியோட முயன்றார். உடனே தேர்தல் பறக்கும் படையினர் மடக்கிப்பிடித்து அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் என்பதும், ராணிப்பேட்டை அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமாருக்கு தேர்தல் பணிக்காக தன்னுடன் சேர்த்து 30 பேர் ஆந்திராவில் இருந்து வந்ததாகவும், அவர்கள் அனைவரும் அங்குள்ள கிடங்கில் இருப்பதாகவும், வாக்காளர்களுக்கு வழங்க கொடுக்கப்பட்ட ரொக்கத்தொகையில் ரூ.15 லட்சம் திருடுப்போனதாக கூறி ஆந்திர இளைஞர்களை வேட்பாளரின் ஆதரவாளர்கள் கட்டி வைத்து அடித்து சித்ரவதை செய்வதாக தெரிவித்தார்.

இதையடுத்து, அதிரடியாக கிடங்குக்குள் நுழைந்த சார் ஆட்சியர் இளம்பகவத், அங்கிருந்த 27 ஆந்திர இளைஞர்களை மீட்டு விசாரணை நடத்தினர். பின்னர், அந்த கிடங்கில் சோதனை நடத்தியபோது அங்கு வாக்காளர் பட்டியல், பூத் சிலிப், துண்டுப் பிரசுரங்கள், கட்சி கொடி ஆகியவை குவியல், குவியலாக இருப்பது தெரியவந்தது.

பிறகு, கிடங்கின் அருகே இருந்த முட்புதரில் 3 கைப்பைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை அதிகாரிகள் கண்டெடுத்தனர். அந்த பையை சோதனையிட்டபோது, அதில் கட்டுக்கட்டாக 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. உடனே, அந்த பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் அங்கிருந்த 27 பேரையும் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

இதைத்தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட பணப்பை மற்றும் மீட்கப்பட்ட 27 பேர் ராணிப்பேட்டை சார் ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். கைப்பற்றப்பட்ட பணத்தை சரிபார்த்தபோது, அதில் 91 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் இருப்பது தெரியவந்தது. அதேபோல கிடங்கில் இருந்த 27 செல்போன்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக எஸ்.எம்.சுகுமாரின் கிடங்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் சார் ஆட்சியர் இளம்பகவத் புகார் கொடுத்தார். அதன்பேரில் வேட்பாளர் சுகுமார் மற்றும் அவரது மகன் கோபி ஆகியோர் மீது 7 பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT