மத்திய பாஜக அரசிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் அதிமுக அரசை மீட்க திமுக கூட்டணி வெற்றி பெறவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் க.மாரிமுத்துவை ஆதரித்து, திருத்துறைப்பூண்டியில் நேற்று நிறைவுநாள் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பேசியது:
பிரதமர் மோடி ஆட்சியில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எதிரான சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றுகிறது.
விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கும் உரிமைக்காக, கடந்த திமுக ஆட்சியில், தமிழ்நாடுநுகர்பொருள் வாணிபக் கழகம்தொடங்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்பட்டு, ரேஷன் கடைகள்மூலமாக மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், தற்போதைய மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தால் கொள்முதலும், விநியோகமும் இருக்காது. விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.
மத்திய பாஜக ஆட்சியில் அரசியலமைப்புச் சட்டம் முழுமையாக சீர்குலைக்கப்பட்டு உள்ளது. தன் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகள் அனைத்தையும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்தியஅரசு தூண்டிவிடுகிறது. திமுகவின் வெற்றியை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற குறுகிய நோக்கத்துடன் வருமான வரி சோதனையை நடத்தி, ஏமாற்றம் அடைந்தனர்.
அதிமுகவினர் நமக்கு எதிரி அல்ல. மத்திய அரசுக்கு அதிமுகஅடிமையாகிவிட்டதால், அதில்இருந்து அக்கட்சியை மீட்க வேண்டும் என்பதாலும், நாட்டில் அரசியலமைப்புச் சட்டத்தை, ஜனநாயகத்தை, மதச்சார்பின்மையை காப்பாற்ற வேண்டும் என்பதாலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும். திமுக கூட்டணிக்கு வெற்றியை தருவதற்கு தமிழக மக்கள் தயாராகிவிட்டனர் என்றார்.