மக்களின் உரிமைகள், எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.
திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேருவை ஆதரித்து ஆழ்வார்தோப்பு பகுதியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
இத்தேர்தலில் மக்களின் பேராதரவுடன் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும். ஆர்எஸ்எஸ், பாஜகவின் அடிமைகளாக இருக்கக்கூடிய அதிமுக ஆட்சியை விரட்ட வேண்டும்.
இந்த ஆட்சி தொடர்ந்தால் இனிமேல் பெண்கள், ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவர்களாக வர முடியாது. நீட் தேர்வை திணித்துவிட்டனர். சமூக நீதி மண் இது. சாதி, மத, பண வெறிக்கு தமிழகத்தில் இடமில்லை. இதைக் கெடுக்க வடக்கிலிருந்து விஷக் கிருமிபோல வந்துள்ளனர்.
குலக்கல்வியை கொண்டு வரும் வகையில் மோடி அரசின்கல்விக் கொள்கை அடுத்து வரப்போகிறது. நம்முடைய கலாச்சாரத்தை பாழ்படுத்தி, வெறுப்பு அரசியலை ஏற்படுத்துகின்றனர்.
குடியுரிமைச் சட்டத்தை கொண்டு வந்து, மக்களுக்கு எதிராகவே செயல்படுகின்றனர். மக்களின் உரிமைகள், எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்றார்.