தமிழகம்

தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக அரசு நிறைவேற்றும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி

செய்திப்பிரிவு

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் அதிமுக அரசு நிச்சயம் நிறைவேற்றும் என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போட்டியிடுகிறார். தொகுதி முழுவதும் இறுதிகட்ட பிரச்சாரம் மேற்கொண்ட அவர் குனியமுத்தூரில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

முன்னதாக நேற்று காலை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: வாக்களித்த மக்களுக்காக, கோவைஎன்றும் காணாத வளர்ச்சியை கடந்த 5 ஆண்டுகளில் அளித்திருக்கிறோம். அனைத்து முக்கிய சாலைகளும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. பல சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து நெரிசலை குறைக்க அனைத்து முக்கிய சாலைகளிலும் புதிய பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. கோவைக்கு 6 புதிய கல்லூரிகள் கொண்டுவந்துள்ளோம். இதனால், குறைந்த கட்டணத்தில் மாணவர்கள் அங்கு படிக்கின்றனர். மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டு 50 சதவீதத்துக்கும் மேல் பணிகள் நிறைவடைந்துள்ளன. விமான நிலைய விரிவாக்கம் நடைபெற்ற பின்னர் சர்வதேச விமானங்கள் இங்கு வந்து செல்லும். இதனால், வேலைவாய்ப்பு அதிகரிக்கும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம்ரேஸ்கோர்ஸ், ஆர்.எஸ்.புரம் பகுதிகள், குளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனை மேம்படுத்தப்பட்டு இதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புற்றுநோய் சிகிச்சைக்கு புதிதாக ரூ.25 கோடியில் இயந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. 2011-க்கு பிறகு கோவை மாவட்டத்தில் கட்டப்பஞ்சாயத்து இல்லை. நிலஅபகரிப்பு இல்லை. தொழிற்சாலைகள், கடைகளில் வசூல் இல்லை. சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நீலகிரி, திருப்பூருக்கு புதிய மருத்துவக் கல்லூரிகள் பெற்றுத்தரப்பட்டுள்ளன. கரோனா காலத்தில் அம்மா உணவகத்தில் இலவச உணவு அளிக்கப்பட்டது.

கட்சி சார்பில் தேவையான மளிகைப் பொருட்கள், காய்கறிகள் அளித்தோம். தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசு அதிமுக அரசு. எனவே, இந்த தேர்தலுக்காக வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறியவையும் நிறைவேற்றப்படும். எனவே, அதிமுக ஆட்சி தொடர மக்கள் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT