கோவை தொண்டாமுத்தூர், சூலூர் தொகுதிகளில் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்த அதிமுகவினர் 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சூலூர்
கோவை சூலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட, காடம்பாடி மதுரை வீரன் கோயில் பகுதியில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாக, சூலூர் தேர்தல் பிரிவு அதிகாரிகளுக்கு இன்று (4-ம் தேதி) தகவல் கிடைத்தது. சூலூர் தொகுதிக்குட்பட்ட பறக்கும்படை அலுவலர் மற்றும் சூலூர் போலீஸார் தகவல் கிடைத்த இடத்துக்குச் சென்று சோதனை நடத்தினர். அதில், அதிமுகவைச் சேர்ந்தவர்கள், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க வலியுறுத்தி பணம் விநியோகிப்பது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு பண விநியோகத்தில் ஈடுபட்டிருந்த 3 பேரைப் பிடித்தனர். விசாரணையில் பிடிபட்டவர்கள், காடம்பாடி மதுரை வீரன் கோயில் வீதியைச் சேர்ந்த ராமசாமி (37), வினோத்குமார் (32), சுரேஷ் (23) ஆகியோர் எனவும், இவர்கள் மூன்று பேரும் அதிமுகவைச் சேர்ந்தர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து பறக்கும்படை அலுவலர்கள் அளித்த புகாரின் பேரில், சூலூர் போலீஸார் மேற்கண்ட மூன்று பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் குறித்த துண்டுப் பிரசுரங்கள், ரூ.4,500 தொகை, வாக்காளர் பட்டியல் விவரம் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர்.
தொண்டாமுத்தூர்
அதேபோல், தொண்டாமுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட, லாலி சாலை, பெரிய மாரியம்மன் கோயில் அருகே, அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணிக்கு, வாக்களிக்க வலியுறுத்தி, அதிமுகவினர் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகித்து வருவதாக, பறக்கும் படை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை செய்தனர். அதில் அதிமுகவினர், வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிப்பது உறுதியானது.
இவ்விவகாரம் தொடர்பாக லாலி சாலை முனியப்பன் கோயில் வீதியைச் சேர்ந்த ஹரிகிஷோர் (22), ஹரிஹரன் (23), சக்திவேல் (22), அசோக் (23), மெல்வின் (23), சேதுராமன் (23) ஆகிய 6 பேரைக் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களிடம் இருந்து 79-வது வார்டுக்கான வாக்காளர் பட்டியல் விவரம், 60 பக்கங்களில் எழுதப்பட்ட வாக்காளர்களின் தொலைபேசி எண்கள், ரூ.39 ஆயிரம் தொகை ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.