தமிழகம்

ராணிப்பேட்டை அதிமுக வேட்பாளர் குடோனில் கட்டுக்கட்டாக ரூ.91.67 லட்சம் பறிமுதல்; 27 ஆந்திர இளைஞர்கள் மீட்பு

என்.சரவணன்

ராணிப்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் எஸ்.எம்.சுகுமாருக்குச் சொந்தமான கிடங்கின் அருகே 91 லட்சத்து 67 ஆயிரம் ரூபாயைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வேட்பாளர் உட்பட 2 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி இறுதிக்கட்டப் பிரச்சாரம் இன்று நிறைவு பெறுகிறது. இதற்கிடையே வாக்காளர்களிடம் இருந்து வாக்குகளைப் பெற பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதைத் தடுக்க, தொகுதி வாரியாக நியமிக்கப்பட்ட தேர்தல் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்புக் குழுவினர் தீவிரக் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் எஸ்.எம்.சுகுமாருக்குச் சொந்தமான கிடங்கு ராணிப்பேட்டை வானாபாடி சாலையில் உள்ள வசந்த் அவென்யு என்ற இடத்தில் அமைந்துள்ளது.

இந்தக் கிடங்கில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்கியிருப்பதாகவும், 20க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்தி ராணிப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி வருவதாகவும் ராணிப்பேட்டை சார் ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான இளம்பகவத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சார் ஆட்சியர் இளம்பகவத், ராணிப்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் பூரணி தலைமையிலான பறக்கும் படையினர், நிலை கண்காணிப்புக் குழுவினர் மற்றம் காவல்துறையினர் நள்ளிரவு 11.10 மணிக்கு வானாபாடி சாலையில் உள்ள சுகுமாரின் கிடங்குக்குச் சென்றனர்.

அப்போது, கிடங்கின் சுற்றுச்சுவர் மீது ஏறிய இளைஞர் ஒருவர் கீழே குதித்து, அதிகாரிகளைக் கண்டதும் தப்பியோட முயன்றார். அவரை மடக்கிப் பிடித்த தேர்தல் பறக்கும் படையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் என்பதும், ராணிப்பேட்டை அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமாருக்குத் தேர்தல் பணிக்காக தன்னுடன் சேர்த்து 30 பேர் ஆந்திராவில் இருந்து வந்ததாகவும், அவர்கள் அனைவரும் அங்குள்ள கிடங்கில் இருப்பதாகவும், வாக்காளர்களுக்கு வழங்கக் கொடுக்கப்பட்ட ரொக்கத் தொகையில் ரூ.15 லட்சம் திருட்டுப் போனதாகக் கூறி ஆந்திர இளைஞர்களை வேட்பாளரின் ஆதரவாளர்கள் கட்டி வைத்து அடித்துச் சித்ரவதை செய்வதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, அதிரடியாகக் கிடங்கிற்குள் நுழைந்த சார் ஆட்சியர் இளம்பகவத், டிஎஸ்பி பூரணி மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் அங்கிருந்த 27 ஆந்திர இளைஞர்களை மீட்டு விசாரணை நடத்தினர். பிறகு அந்தக் கிடங்கில் சோதனை நடத்தியபோது அங்கு வாக்காளர் பட்டியல், பூத் ஸ்லிப், துண்டுப் பிரசுரங்கள், கட்சிக் கொடி ஆகியவை குவியல் குவியலாக இருப்பது தெரியவந்தது.

பிறகு, கிடங்கின் அருகே இருந்த முட்புதரில் 3 கைப்பைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை அதிகாரிகள் கண்டெடுத்தனர். அந்தப் பையைச் சோதனையிட்டபோது அதில் கட்டுக்கட்டாக 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. உடனே, அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் அங்கிருந்த 27 பேரையும் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது அங்கு அதிமுக வேட்பாளர் சுகுமார் வந்தார்.

பிறகு, கிடங்கின் அருகே கைப்பற்றப்பட்ட பணம் தன்னுடையது இல்லை என அவர் முதலில் வாக்குவாதம் செய்தார். மேலும், தேர்தல் பணிக்காக அழைத்து வரப்பட்டவர்களை எங்கே அழைத்துச் செல்கிறீர்கள் எனக் கேட்டார். பிறகு, அதிகாரிகள் எச்சரித்ததைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இதைத் தொடர்ந்து கைப்பற்றப்பட்ட பணப் பையுடன் மீட்கப்பட்ட 27 பேரும் ராணிப்பேட்டை சார் ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். கைப்பற்றப்பட்ட பணத்தைச் சரிபார்த்தபோது அதில் 91 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் இருப்பது தெரியவந்தது. அதேபோலக் கிடங்கில் இருந்த 27 செல்போன்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக எஸ்.எம்.சுகுமாரின் கிடங்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் சார் ஆட்சியர் இளம்பகவத் புகார் கொடுத்தார். அதன்பேரில் வேட்பாளர் சுகுமார் மற்றும் அவரது மகன் கோபி ஆகியோர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக வேட்பாளரின் கிடங்கில் ரூ.91.67 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT