தமிழகம்

வடசென்னையில் மழை வெள்ளம்: 10 இடங்களில் மறியல் போராட்டம்

செய்திப்பிரிவு

வடசென்னை முழுவதும் திரும்பிய பக்கமெல்லாம் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

சென்னையில் மழை பெய்யும் போதெல்லாம் வடசென்னை பகுதிகளான வியாசர்பாடி, பெரம்பூர், புரசைவாக்கம், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, அம்பத்தூர், கொளத்தூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கும். இங்கு புகைப்படத்துக்கு 'போஸ்' கொடுப்பதற்கென்றே அரசியல்வாதிகள் சிலர் வந்து செல்வார்கள். ஆனால் இந்த முறை அதற்குக் கூட அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ மழை வெள்ளம் தேங்கிய இடங்களுக்கு வரவில்லை.

கடந்த 3 நாட்களாக பெரம்பூர் நெடுஞ்சாலை, ஸ்டீபன்சன் சாலை, பேரக்ஸ் சாலை, குக்ஸ் சாலை, ஓட்டேரி மற்றும் தண்டையார்பேட்டையில் ஏராளமான சாலைகளில் இடுப்பளவு மழை நீர் தேங்கி நிற்கிறது. மழை நீரை அகற்றுவதற்கு அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அப்பகுதி மக்கள் தீவில் சிக்கியது போல தவித்து வருகின்றனர்.

அம்பத்தூர் ராஜீவ் நகர், திருமலைப்பிரியா நகர், பானு நகர், மேனாம்பேடு, தாங்கல் ஏரி, பட்டரைவாக்கம் பகுதிகளில் சாலையில் 3 அடி உயரத்துக்கு மழை நீர் தேங்கியுள்ளது. ஏராளமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துவிட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். இருசக்கர வாகனம் உட்பட எந்த வாகனமும் செல்ல முடியாத நிலை உள்ளது.

அம்பத்தூர் தொழிற்பேட் டையில் 500 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்குள் தண்ணீர் புகுந்து குளம் போல் தேங்கிக் கிடக்கிறது. அவற்றை சுற்றியுள்ள வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துவிட்டது. கொரட்டூரில் ரயில்வே சுரங்கப்பாதைக்காக தோண்டப்பட்ட 25 அடி ஆழ பள்ளம் முழுவதும் மழைநீர் தேங்கி நிற்கிறது. நேற்று முன்தினம் இதற்குள் தவறி விழுந்த ஒருவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.

10 இடங்களில் மறியல்

சாலை முழுவதும் மழை வெள்ளம் தேங்கிக் கிடக்கும் நிலையில் இதுவரை அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை கண்டித்து அம்பத்தூர்-திருமங்கலம் சாலை, ஆவடி-பூந்தமல்லி சாலை, திருவொற்றியூர் தொட்டிக்குப்பம் பகுதி, தண்டையார்பேட்டை வைத்தியநாதன் தெரு-இளைய முதலி தெரு சந்திப்பு, பாடி பாலம் அருகில் என வடசென்னையில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்கள் மறியல் மற்றும் போராட்டம் நடத்தினர்.

SCROLL FOR NEXT