அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் நீட் தேர்வால் மறைந்த அனிதா, அதிமுகவுக்கு ஆதரவாகப் பேசுவதுபோல் பதிவிட்டிருந்தார். அதற்கு அனிதாவின் சகோதரர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துக் காணொலி வெளியிட்டதால் அப்பதிவை நீக்கினார் பாண்டியராஜன்.
நீட் தேர்வு அமலானதால் மாநிலவழிக் கல்வியில் படித்த மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதில் மாணவி அனிதா கட் ஆஃப் மதிப்பெண்ணில் தகுதி பெற்றிருந்தும் நீட் தேர்வில் தோல்வி அடைந்தார். அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்குத் தொடுத்தார். ஆனால், எதிராகத் தீர்ப்பு வந்தது. இருப்பினும் தனது போராட்டம் தொடரும் என்று அறிவித்திருந்த அனிதா, 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ம் தேதி திடீரென தற்கொலை செய்துகொண்டார்.
அனிதா தற்கொலை தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை எதிர்த்த நீட்டை அவருக்குப் பின்னர் தமிழக அரசு அனுமதித்தது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. அனிதா குடும்பத்தினரை அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் சந்தித்து ஆறுதல் கூறினர். நிதியுதவி வழங்கினர். அதே நேரம் தமிழக அரசு அறிவித்த நிதியுதவியை அனிதா குடும்பத்தினர் வாங்க மறுத்தனர்.
நீட் தேர்வால் ஆண்டுதோறும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாகி வரும் நிலையில், நீட் தேர்வைத் தடுக்கத் தவறிவிட்டதாகத் தமிழக அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மறுபுறம் நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆதரவாக 7.5% உள் ஒதுக்கீட்டை அரசு கொண்டு வந்தது.
இந்நிலையில் தேர்தல் நேரத்தில் நீட் விவகாரம் அதிமுகவுக்கு எதிரான பிரச்சாரமாக மாறி வருகிறது. இந்நிலையில் இன்று காலை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், அனிதா தற்போது அதிமுகவை ஆதரிப்பது போலச் சித்தரித்து ஒரு வீடியோவைப் பதிவிட்டிருந்தார். அதில் அனிதா பேட்டியின் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அனிதாவின் சகோதரர் மணிரத்னம், அமைச்சர் பாண்டியராஜனுக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துக் காணொலி பதிவிட்டிருந்தார்.
''அனிதா மரணம் எதனால் நிகழ்ந்தது, அன்று நீட் தேர்வு சட்டமாகும்போது அதிமுக வெளிநடப்பு செய்து ஆதரவளித்தது போன்ற பல காரணங்கள் உங்களுக்கு எதிராக இருக்கும்போது கொஞ்சம் கூட அதுகுறித்துக் கூச்சப்படாமல் இதுபோன்ற காணொலியை எப்படி வெளியிட முடிகிறது, உடனடியாக அதை நீக்குங்கள்'' என்று மணிரத்னம் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் காணொலியை நீக்கினார். அமைச்சர் பாண்டியராஜன் அனிதாவின் பேட்டியைத் தவறாகச் சித்தரித்துக் காணொலி வெளியிட்டதாக மணிரத்னம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.