தமிழகம்

பள்ளிகள் நாளை திறப்பு: தயார் நிலையில் 281 மாநகராட்சி பள்ளிகள் - அமைச்சர் வளர்மதி தகவல்

செய்திப்பிரிவு

மழை காரணமாக விடுமுறை விடப்பட்ட பள்ளிகள் நாளை திறக்கப்படுகின்றன. சென்னையில் உள்ள 281 மாநகராட்சி பள்ளிகளையும் தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சமூகநலத்துறை அமைச்சர் பா.வளர்மதி கூறினார்.

இதுதொடர்பாக சென்னை ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களிடம் சமூகநலத்துறை அமைச்சர் பா.வளர்மதி நேற்று கூறியதாவது:

கனமழை காரணமாக விடுமுறை விடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் திங்கள்கிழமை (நாளை) திறக்கப்படுகின்றன. சென்னை மாநகராட்சியின் 281 பள்ளிகளையும் சுத்தம் செய்து தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தொடங்கப்பட்ட 96 நிவாரண முகாம்களில் தற்போது 42 முகாம்கள் மட்டும் செயல்படுகின்றன. முகாம்களில் 6,600 பேர் உள்ளனர். மற்றவர்கள் வீடு திரும்பிவிட்டனர்.

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 66 வீடுகள் சேதமடைந்துள்ளன. அதற்காக இதுவரை ரூ.46 லட்சத்து 83 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வளர்மதி கூறினார். கைத்தறி, துணி நூல் துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா, மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, ஆணையர் விக்ரம் கபூர், மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி, சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குனர் சந்திரமோகன் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT