தமிழகத்தில் 27 மாவட்டங்களில் வழக்கத்தைவிட 11 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த சில நாட்களாக வடமேற்குதிசையிலிருந்து தமிழகப் பகுதி நோக்கி தரைக்காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக பல்வேறுநகரங்களில் வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகரித்து வருகிறது. நாளை (ஏப்.4) சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய 27 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 7 டிகிரி முதல் 11 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.
5 முதல் 7-ம் தேதி வரை கரூர்,தருமபுரி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது வழக்கத்தைவிட 9 டிகிரி வரை உயரக் கூடும்.
வெப்பச்சலனம் காரணமாக வரும் 7-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
12 இடங்களில் வெயில் சதம்
நேற்று மாலை 5.30 மணி வரைஅதிகபட்சமாக வேலூர், திருப்பத்தூர், திருப்பூர் ஆகிய இடங்களில் தலா 108 டிகிரி, ஈரோடு,திருத்தணி, மதுரை ஆகிய இடங்களில் தலா 106 டிகிரி, சேலத்தில் 105 டிகிரி, தருமபுரியில் 104 டிகிரி, கடலூர், சென்னை நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 101 டிகிரி,சென்னை விமான நிலையத்தில் 100 டிகிரி வெயில் பதிவானது.