தமிழகம்

இன்சூரன்ஸ் பணம் தருவதாகக் கூறி ரூ.2.13 கோடி மோசடி செய்த 6 பேர் கும்பல் டெல்லியில் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை

செய்திப்பிரிவு

ஆயுள் காப்பீடு நிறுவனத்திலிருந்து பேசுவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.2 கோடியே 13 லட்சம் மோசடி செய்த கும்பலை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் டெல்லி சென்று கைது செய்துள்ளனர்.

சென்னை, மந்தைவெளியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியை சுதா. இவரின் கணவர் முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி. சுதாவை போனில் தொடர்பு கொண்ட நபர்ஒருவர், தன்னை ஆயுள்காப்பீடு நிறுவனத்தில் இருந்து பேசுவதாகக் கூறி அறிமுகம் செய்துள் ளார்.

மேலும், கணவர் இறந்தது தொடர்பாக முதிர்ச்சி பெற்ற பணத்தை பெற முன் தொகை செலுத்த வேண்டும் என நம்ப வைத்து ரூ.2 கோடியே 13 லட்சத்தை சுதாவிடம் பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளார்.

ஆனால், முதிர்வு தொகையை பெற்றுக் கொடுக்கவில்லை. மேலும், பெற்ற பணத்தையும் திரும்ப செலுத்தவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த சுதா இதுகுறித்து சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். அதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், மோசடி நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இதையடுத்து மோசடி தொடர்பாக டெல்லியில் தலைமறைவாக இருந்த டெல்லியைச் சேர்ந்த அமன் பிரசாத், அவரது கூட்டாளிகளான அதே மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் குமார், மனோஜ் குமார், குபீர்சர்மா என்ற பிரின்ஸ், ஹீமன்சு தாஹி, ராம்பால் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

காவல் ஆணையர் பாராட்டு

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘கைது செய்யப்பட்டவர்கள் டெல்லியில் ஆயுள் காப்பீடு நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகக் கூறி சுதாவைநம்ப வைத்து முன்பணம் கேட்டுக் கொண்டதின்பேரில் சுதா பல்வேறு வங்கி கணக்குகளில் அவர்கள் கேட்ட பணத்தை செலுத்தியுள்ளார். இதேபோல் இந்த கும்பல் மேலும் பலரை ஏமாற்றியுள்ளது. இது தொடர்பாகவும் விசாரித்து வருகிறோம்’ என்றனர்.

இதற்கிடையே மோசடி கும்பலை டெல்லி சென்று கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீஸாரை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் நேரில் அழைத்து பாராட்டினார்.

இந்த கும்பல், இதேபோல் மேலும் பலரை ஏமாற்றியுள்ளது. இது தொடர்பாகவும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT