திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு 12 தனியார் நிறுவனங்களுடன் உள்ள தொடர்பு குறித்து வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை. இவரது கணவர்சபரீசன். அரசியலில் மு.க.ஸ்டாலினின் நிழல்போல செயல்பட்டு, பல்வேறு பணிகளை செய்து வருகிறார். திமுகவுக்கான தேர்தல்வியூகங்களை அமைத்து கொடுக்கபிரசாந்த் கிஷோரை அழைத்து வந்ததும் சபரீசன்தான். சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் இருந்துதான் பணப்பரிமாற்றம் செய்யப்படுவதாக வருமானவரித் துறைக்கு தகவல் கிடைத்ததாகவும் அதன்பேரிலேயே நேற்று முன்தினம் சபரீசன் மற்றும் அவரது நண்பர்களின் வீடுகளில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
சுமார் 12 நிறுவனங்களுடன் சபரீசனுக்கு தொடர்பு இருப்பதுதெரியவந்திருப்பதாக வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மின்சாரம், டிராவல்ஸ், நிதி, மினரல்ஸ் என பலதரப்பட்ட நிறுவனங்களுடன் சபரீசனுக்கு தொடர்பு உள்ளது. இந்த நிறுவனங்களில் விரைவில் சோதனை நடத்த இருப்பதாகவும் இந்த நிறுவனங்களின் நிதி விவகாரங்களை ஆழமாக ஆய்வு செய்ய வேண்டி இருக்கும் என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சபரீசனின் உறவினர் பிரவீன் கணேஷ் என்பவரும் சுமார் 6 நிறுவனங்களின் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார். இவர் எப்படி அந்த பொறுப்புகளுக்கு வந்தார். இந்த நிறுவனங்களின் நிதி ஆதாரம் என்ன என்பது குறித்தும் விசாரணை நடந்து வருவதாக வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யாரை சந்தித்தார்?
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நாக்பூர், மும்பை, டெல்லி, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு சபரீசன் சென்று வந்துள்ளார். இவர் எதற்காக அங்கு சென்றார். அந்த இடங்களில் யாரை சென்று சந்தித்தார் என்பது குறித்து விசாரணை நடத்த இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுபான ஆலை
இதேபோல் சென்னை நந்தனத்தில் உள்ள மதுபான ஆலையில் 2-ம் நாளாக வருமானவரித் துறைஅதிகாரிகள் சோதனை நடத்தினர். சபரீசன், அண்ணா நகர் திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்திக், ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவன உரிமையாளர் பாலா ஆகியோர் வீடுகள் உட்பட தமிழகம் முழுவதும் 28 இடங்களில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதேபோல் சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மதுபானஆலையிலும் அதன் உரிமையாளர் ஜெயமுருகன் வீட்டிலும் நேற்று முன்தினம் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சபரீசன் வீடு உட்படமற்ற இடங்களில் ஒரேநாளில் சோதனையை முடித்த அதிகாரிகள், மதுபான ஆலையில் மட்டும் நேற்றும் 2-வது நாளாக சோதனை நடத்தினர். ஜெயமுருகனின் நிறுவன இடங்களில் 2019-ம் ஆண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நிலையில் தற்போது மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது.
ஜெயமுருகன் திரைப்பட தயாரிப்பாளராகவும் உள்ளார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதி கதை, வசனம் எழுதிய உளியின் ஓசை, பெண் சிங்கம் போன்ற திரைப்படங்களின் தயாரிப்பாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மதுபான ஆலை வளாகம் மற்றும் அலுவலகங்கள் என பெரியஇடமாக இருப்பதால் 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. சில ரகசிய தகவல்களின்பேரிலேயே இந்த சோதனைகள் நடைபெறுகிறது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.