கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்பு குழுவின் அறையில் பொழுது போக்கு நிகழ்வுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. 
தமிழகம்

தேர்தல் ஊடக கண்காணிப்பு அறையா..! பொழுது போக்கும் அறையா..!

செய்திப்பிரிவு

மாவட்ட ஆட்சியரை தலைமை யாகக் கொண்டு, 4 உறுப்பினர்களை கொண்ட தேர்தல் ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்பு குழு மாவட்டந் தோறும் அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு தேர்தல் தொடர்பான உள்ளூர் தொலைக்காட்சி, அனைத்து செய்தித்தாள்கள், வானொலி மற்றும் எஃப்.எம், குறுஞ்செய்திகள், திரையரங்குகள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை கண்காணிக்க வேண்டும்.

உள்ளூர் தொலைக்காட்சிகள் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை இந்த ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக்குழு அனுமதி பெற்று ஒளிப்பரப்பு செய்ய வேண்டும்.

இக்குழு அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகள் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் இருப்பின், அவற்றைக் கண்காணித்து சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் விளம்பரம் தொடர்பான செலவினங்கள் குறித்து விளக்கம் அளிக்க அறிவுறுத்தப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 3 தினங்களுக்கு முன்பும், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்கள் 7 தினங்களுக்கு முன்பும் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை சமர்ப்பித்து ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவினரிடம் அனுமதி பெற வேண்டும்.

இதற்காக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு அறை ஒதுக்கப்பட்டு பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டம் முழுக்க தேர்தல் தொடர்பான செய்திகளும், பணப் பட்டுவாடா குறித்த வழக்குகள் தொடர்பான செய்திகளும் தொலைக் காட்சிகளில் ஒளி, ஒலி பரப்பிக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று இந்த அறையில் இரு பணியாளர்கள் மட்டுமே இருந்தனர்.

அந்த இரு பணியாளர்களும் செய்தி சேனல்களை தவிர்த்து விட்டு, பொழுதுபோக்கு சேனல்களை பார்த்துக் கொண்டு பொழுதை கழித்துக் கொண்டிருந்தனர்.

SCROLL FOR NEXT