பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளராக கேசவ விநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 11 ஆண்டுகளாக அப்பதவியில் இருந்த எஸ்.மோகன்ராஜூலு மாநிலப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா நேற்று வெளியிட்டார்.
பாஜகவில் அதிகாரம் மிக்க மாநில மையக்குழுவும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக பாஜகவில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியர்
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தி லிருந்து பாஜகவுக்கு அனுப்பப்பட்ட கேசவ விநாயகம், கடந்த மார்ச் 15-ம் தேதி அக்கட்சியின் மாநில இணை அமைப்புப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்த இவர், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியராக இருந்து வருகிறார்.
பாஜகவைப் பொருத்தவரை அமைப்புப் பொதுச்செயலாளர் பதவி என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. கட்சியின் அமைப்புப் பணிகள் அனைத்தும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். இப்பொறுப்புகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அனுபவம் வாய்ந்த முழுநேர ஊழியர்கள் நியமனம் செய்யப்படுவது வழக்கமாகும்.
கடந்த அக்டோபர் 15-ம் தேதி முதல் தமிழகத்தில் பாஜக உள்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. வரும் டிசம்பர் இறுதியில் மாநிலத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் கடந்த 11 ஆண்டுகளாக அமைப்பு பொதுச்செயலாளராக இருந்த மோகன்ராஜூலு திடீரென அப்பொறுப்பிலிருந்து விடுவிக் கப்பட்டுள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் தேமுதிக, பாமக, மதிமுகவுடன் கூட்டணி அமைவதில் அவர் முக்கியப் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில மையக்குழு மாற்றி அமைப்பு
பாஜகவின் மாநில மையக் குழுவில் மாநில துணைத் தலைவர்கள் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், சுப.நாகராஜன், மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன் ஆகிய 4 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், தேசிய செயலாளர் எச்.ராஜா, முன்னாள் மாநிலத் தலைவர்கள் இல.கணேசன், பொன்.ராதா கிருஷ்ணன், கே.என்.லட்சுமணன், சி.பி.ராதாகிருஷ்ணன், மாநிலப் பொதுச்செயலாளர்கள் எஸ்.மோகன்ராஜூலு, எஸ்.ஆர்.சரவணப்பெருமாள், ஜி.கே.எஸ்.செல்வகுமார், எஸ்.நரேந்திரன் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் பெரும் பாலானவர்கள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ண னின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழக பாஜகவில் செய்யப்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.