தமிழகம்

புதுச்சேரியில் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் பிரச்சாரம்

அ.முன்னடியான்

புதுச்சேரியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வேனில் அமர்ந்தபடியே சைகையால் பிரச்சாரம் மேற்கொண்டார்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக 26 இடங்களில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில், தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் புதுச்சேரிக்கு வந்தார்.

இரவு தவளக்குப்பம் அருகே உள்ள பூரணாங்குப்பம் புதுக்குப்பத்தில் தனியார் ஓட்டலில் தங்கியிருந்த அவர், இன்று (ஏப் 3) மணவெளி தொகுதி தேமுதிக வேட்பாளர் திருநாவுக்கரசு, ஏம்பலம் தொகுதி வேட்பாளர் ஸ்ரீபன், பாகூர் தொகுதி வேட்பாளரும், அக்கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளருமான வி.பி.பி வேலுவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

தவளக்குப்பம் சந்திப்பில் பிரச்சாரத்தைத் தொடங்கிய விஜயகாந்த் அங்கு தனது பிரச்சார வேனில் அமர்ந்தபடி தொண்டர்களைப் பார்த்து கைகளை அசைத்தும், கும்பிட்டும், வெற்றியைக் குறிப்பிடும் வகையில் சைகை செய்தபடியும் சில நிமிடங்கள் பிரச்சாரம் செய்தார்.

பின்னர், அங்கிருந்து கிளம்பி ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட பின்னாச்சிக்குப்பம் சாலை, பாகூர் பேட் பகுதி, மாட வீதி வழியாகச் சென்று பாகூர் தொகுதிக்குட்பட்ட மாதா கோயில் சந்திப்பை அடைந்தார். அங்கும் சில நிமிடங்கள் சைகையால் வாக்கு சேகரித்த விஜயகாந்த்,

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கன்னியக்கோயில், முள்ளோடை வழியாக தமிழகம் புறப்பட்டுச் சென்றார். இதில் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT