மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் நினைவாக டெல்லியில் அறிவுசார் மையத்தை விரைவில் கெஜ்ரிவால் அரசு அமைக்க உள்ளது.
அப்துல் கலாம் கடந்த ஜூலை 27-ம் தேதி மாரடைப்பால் காலமானார்.
கலாம் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின் தமது வாழ்நாளில் கடைசி வரையிலும் வாழ்ந்து மறைந்த டெல்லி ராஜாஜி மார்க் 10-ம் எண் வீட்டை அவரது நினைவாக , தேசிய அறிவுசார் கண்டுபிடிப்பு மையம்’ அமைக்க வேண்டும். இதன் மூலம் கலாம் தம் வாழ்நாள் முழுவதும் சேர்த்த நூல்கள், அவர் எழுதிய புத்தகங்கள், கலாமின் தொலைநோக்கு பார்வைகளை நமது மாணவர்களும், இளைஞர்களும் பெற முடியும் என கலாமின் சகோதரர் முத்து மீரா மரைக்காயர் பிரதமர் நரேந்திரமோடிக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
கடந்த அக். 15 கலாமின் 84-வது பிறந்த தினத்தன்று டெல்லியில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் (டிஆர்டிஓ) நிறுவப்பட்டுள்ள கலாமின் மார்பளவு சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்து கலாமை கவுரவிக்கும் வகையில் அவரது சொந்த ஊரான ராமேசுவரத்தில் நினைவு மண்டபம் கட்டப்படும் என அறிவித்திருந்தார்.
பின்னர் கலாம் வசித்த டெல்லி வீட்டை அக். 31-க்குள் காலி செய்யுமாறு மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் தனிச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்பபியதைத் தொடர்ந்து கலாம் பயன்படுத்தியப் பொருட்கள் அக்டோபர் கடைசி வாரத்தில் ராமேசுவரம் வந்து சேர்ந்தன.
இந்நிலையில், கலாமின் புத்தகங்கள் மற்றும் உடைமைகளை வைத்து அறிவுசார் மையம் அமைக்க டெல்லி அரசு தயாராக இருப்பதாக கடந்த வாரம் அறிவித்தது.
இது குறித்து அப்துல் கலாமின் பேரன் ஷேக் சலீம் ராமேசுவரத்தில் நேற்று தி இந்துவிடம் கூறியதாவது: தாத்தா அப்துல் கலாம் பயன்படுத்திய புத்தகங்கள் மற்றும் உடைமைகளை வைத்து அறிவுசார் மையம் அமைக்க டெல்லி அரசு தயாராக இருக்கிறது. இதற்காக கலாமின் புத்தகங்கள் மற்றும் உடைமைகளை தங்களிடம் வழங்க கலாம் குடும்பத்தினர் முன்வந்தால் உடனடியாக ஏற்றுக்கொள்வோம் என டெல்லி அரசிடமிருந்து கடிதம் வந்தது. இந்த கடிதத்துக்கு ஒப்புதல் அளித்து பதில் எழுதியுள்ளோம் என்றார்.