அண்ணா சிலைக்கு தீ வைத்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, திருமாவளவன் இன்று (ஏப். 03) வெளியிட்ட அறிக்கை:
"கள்ளக்குறிச்சி மாவட்டம் மாதவச்சேரி என்னும் கிராமத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலையை தீ வைத்து எரித்துள்ளனர். அவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
மாதவச்சேரி கிராமத்தில் பொதுமக்களால் அமைக்கப்பட்டிருக்கும் அண்ணாவின் திருவுருவச் சிலை தேர்தல் நடத்தை விதிகளின் காரணமாக துணியால் மூடி வைக்கப்பட்டிருந்தது. அந்தத் துணியின்மீது மண்ணெண்ணெய்யை ஊற்றித் தீ வைத்துள்ளனர். பெரியார் சிலையையும் திருவள்ளுவர் சிலையையும் அண்ணா சிலையையும் சேதப்படுத்தும் போக்கு தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
திராவிட இயக்கத்தையும் பெரியார், அண்ணா ஆகியோரையும் சனாதன சக்திகள் தொடர்ந்து இழிவுபடுத்திப் பேசி வருகின்றனர். அண்ணாவின் பெயரால் கட்சி நடத்துகிற அவரது உருவப்படத்தை கொடியில் வைத்திருக்கிற அதிமுகவினர் இந்த சனாதன பயங்கரவாதிகளுக்குத் துணை போவது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
தேர்தல் நேரத்தில் அமைதியை சீர்குலைக்கும் விதமாக, வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் சனாதன சக்திகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதற்கு தேர்தல் ஆணையமும், காவல்துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்".
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.