மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திருநெல்வேலியில் இன்று நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். சென்னையில் இன்று காலை பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு திருவனந்தபுரம் வரும் அமித் ஷா, அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருநெல்வேலிக்கு வருகிறார். வண்ணார் பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்துக்கு பகல் 12.35 மணிக்கு வரும் அவர், 12.50 மணியளவில் தச்ச நல்லூரில் புறவழிச்சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டத்தில் அதிமுக, பாஜக வேட் பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
அமித் ஷா வருகையை முன்னிட்டு திருநெல்வேலியில் மாநகர காவல்துறை ஆணையர் அன்பு கண்காணிப்பில் நூற்றுக் கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுக்கூட்டம் நடை பெறும் பகுதியில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப் பட்டுள்ளது. வண்ணார்பேட்டை ரவுண்டானா முதல் தச்சநல்லூர் வரையிலான சாலையோர உணவு கடைகள், டீ கடைகள், கரும்புச்சாறு கடைகள், இளநீர் கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. இன்று மாலை வரை இந்த கடைகளை திறக்க போலீஸார் அனுமதி மறுத்து ள்ளனர்.
போக்குவரத்து மாற்றம்
வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, சென்னை செல்லும் பேருந்துகள் பாளையங்கோட்டை பேருந்து நிலையம், சமாதானபுரம் வழியாக கேடிசி நகர் நான்குவழிச்சாலையில் பயணிக்கவும், திருநெல்வேலி டவுன் பகுதியிலிருந்து புதிய பேருந்து நிலையம் வரும் பேருந்துகள் கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தை அடுத்துள்ள எம்.ஜி.ஆர். சிலையருகே திரும்பி மேலப்பாளையம் வழியாக புதிய பேருந்து நிலையத்துக்கு செல்லும் வகையிலும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
டிஜிபி ஆய்வு
அமித்ஷா பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் விழா மேடை மற்றும் மைதானத்தை தமிழக டிஜிபி திரிபாதி, தென்மண்டல ஏடிஜிபி ஆபாஸ்குமார் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் நேற்றிரவு ஆய்வு செய்தனர்.