தமிழகம்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நண்பர் மற்றும் அதிமுக வேட்பாளர் அறையில் வருமானவரித் துறை சோதனை

செய்திப்பிரிவு

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நண்பர் மற்றும் வால்பாறை அதிமுக வேட்பாளர் தங்கியிருந்த அறையில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.

சட்டப்பேரவை தேர்தல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க அரசியல் கட்சியினர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களின் வீடுகளில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் நண்பர் சீனிவாசன்என்பவரின் வீட்டில் நேற்று வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சிவகாசிஅருகே திருத்தங்கல் பகுதியில்உள்ள அவரின் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இவர் அதிமுகவின் முன்னாள் நகர மன்ற உறுப்பினரும் ஆவார்.

அதேபோல், கோவை மாவட்டம் வால்பாறையில் அதிமுக வேட்பாளராக அமுல்கந்தசாமி போட்டியிடுகிறார். வெளியூரைச் சேர்ந்த இவர்,பொள்ளாச்சி அருகே சுப்பே கவுண்டன் புதூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி, பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த விடுதியில் பணப் பட்டுவாடா நடப்பதாக, வால்பாறை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் துரைசாமிக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து வருமானவரித் துறை அதிகாரிகள் மற்றும் வால்பாறை தொகுதிக்கு உட்பட்ட பறக்கும் படை குழுவினர், அமைச்சர் தங்கியிருந்த விடுதியில் நேற்று அதிகாலை திடீர் சோதனை நடத்தினர். 3 மணி நேரம் இச் சோதனை நடைபெற்றது.

வால்பாறை தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆறுமுகமும் இதே விடுதியில் தங்கியிருந்து பிரச்சாரம் செய்கிறார். அவரது அறையிலும் சோதனை நடந்தது.

SCROLL FOR NEXT