சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி மாற்றம் உறுதியாகிவிட்டது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
கோவை தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா எஸ். ஜெயக்குமாரை ஆதரித்து காங்கிரஸ் சார்பில் ராஜவீதி தேர்முட்டி பகுதியில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்திய அளவில் அதிகம் பாதிக்கப்பட்டது கோவை, திருப்பூர் நகரங்கள் தான். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையில் நாட்டில் பெட்ரோல், காஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு விலையைக் குறைப்பதற்கு பதிலாக விலை உயர்வை அதிகரித்து வருகிறது. வன்முறை மூலம் எதற்கும் தீர்வு காண முடியாது.
வன்முறையின் மூலம் வெறுப்பை விதைக்கவே பாஜகவினர் விரும்புகின்றனர். காந்தி கொலைக்கு 60 ஆண்டுகளுக்கு பின்னரும் தவறான பாதையில் பாஜக பயணிக்கிறது. இதனை தமிழகம் அனுமதிக்காது.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சி அடைந்த காலத்தில் தனது நிர்வாக திறமையால் அவர் இந்தியாவின் பொருளாதாரத்தை காப்பாற்றினார். அதனை உலக தலைவர்கள் எல்லோரும் பாராட்டினார்கள். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தவரை தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. பாஜக ஆட்சி மத்தியில் வந்த பின்னர் தான் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி மாற்றம் உறுதியாகி விட்டது. இதனால் எதிரணியினர் துவண்டு போய்விட்டனர். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்க போவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.
இதில் வேட்பாளர் மயூரா எஸ். ஜெயக்குமார், ம.தி.மு.க. மாநகர் மாவட்ட தலைவர் ஆர்.ஆர். மோகன்குமார் உட்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.