திருவெறும்பூர் தொகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதே இலக்கு என திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இதுகுறித்து ‘இந்து தமிழ்' நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி:
கடந்த 5 ஆண்டுகளில் எதிர்கட்சி எம்எல்ஏவாக இருந்தாலும்கூட, என்னால் முடிந்த அளவுக்கு அரசுடன் போராடி ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். என் கால்படாத கிராமங்கள், தெரியாத மக்களே இல்லை. அதனால்தான், தற்போது பிரச்சாரத்துக்குச் செல்லுமிடங்களில் மக்கள் உற்சாகத்துடன் வரவேற்கின்றனர். என் வெற்றி உறுதியாகிவிட்டதை உணர முடிகிறது.
சொன்னதைச் செய்வார்
அரியமங்கலம் குப்பைக் கிடங்கை மாற்றக் கோரி பல போராட்டங்கள் நடத்தியுள்ளேன். சட்டப்பேரவையிலும் வலியுறுத்தினேன். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். மேலும் இத்தொகுதியின் வளர்ச்சிக்காக ஐ.டி பார்க் விரிவாக்கம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களையும் அவர் அறிவித்துள்ளார். அதன்படி நிச்சயம் அவர் செய்து கொடுப்பார்.
சாதனை புத்தகங்கள் விநியோகம்
5 ஆண்டுகளில் செய்த சாதனைகள், தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் செய்த பணிகள், சட்டப்பேரவையில் எழுப்பிய கேள்விகள், துவாக்குடி - பால்பண்ணை சர்வீஸ் சாலைக்கான முயற்சிகள் குறித்து 4 புத்தகங்களை வெளியிட்டுள்ளேன். பிரச்சாரத்தின்போது அவற்றை மக்களிடம் விநியோகித்து வருகிறோம். வெளிப்படையாக இருப்பதால் மக்களிடம் என் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது.
தொழில் வளர்ச்சி
10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி எம்எல்ஏ தொகுதியாகவே உள்ள திருவெறும்பூர், இம்முறை ஆளுங்கட்சி தொகுதியாக மாறுவது உறுதியாகிவிட்டது. எனவே இங்கு ஏராளமான திட்டங்கள் கிடைக்கும். அரசின் மின் திட்டங்கள் பெல் நிறுவனத்துக்கு கிடைக்க உதவுவேன். நலிவடைந்த சிறு குறு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பேன். புதிய தொழில் நிறுவனங்களை கொண்டு வர முயற்சிப்பேன்.
இத்தொகுதியிலுள்ள இளைஞர்கள், பெண்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதே என் குறிக்கோள். இதற்காக பல இடங்களில் நூலகம் அமைத்து போட்டித்தேர்வு மற்றும் வேலைவாய்ப்புக்கான பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குங்குமபுரம் உள்ளிட்ட கிராம மக்களுக்கான பட்டா பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்துவேன்.
ஆதரவாய் அன்பில் அறக்கட்டளை
அரசு நிதி மட்டுமின்றி அன்பில் அறக்கட்டளை மூலமாக ஆண்டுதோறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி இதுவரை 9 ஆயிரம் பேருக்கு வேலை பெற்றுத் தந்துள்ளோம்.
பள்ளிகளுக்கு இருக்கைகள், சீருடைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் வழங்கியுள்ளோம். மாற்றுத் திறனாளிகள், தொழில் முனைவோரின் மேம்பாட்டுக்கு ஆதரவாக நிற்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.