திருச்சி லால்குடி தொகுதியில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் டி.ஆர்.தர்மராஜை ஆதரித்து, அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
வாளாடியில் தொடங்கி நகர், லால்குடி உள்ளிட்ட பகுதியில் ஜி.கே.வாசன் பேசியது:
தமிழக முதல்வரும், துணை முதல்வரும் சாதாரண மனிதர்களாக இருந்து, மக்களின் எண்ணத்தை அறிந்து அதற்கேற்ப திட்டங்களைத் தொடர்ந்து அளித்து வருகின்றனர். எனவே, மக்கள் நலத் திட்டங்கள் தொடர இந்த ஆட்சி மீண்டும் அமைய வேண்டும்.
நாட்டிலேயே மகளிருக்கு அதிக திட்டங்கள் அளிக்கும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. மக்களின் துன்பங்களை குறைக்கும் வகையில் அதிமுக தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது. தொகுதியின் வளர்ச்சி தொடரவும், வாக்காளர்களின் வாழ்வாதாரம் தொடரவும், மக்களுக்கு நல்வாழ்வு அமையவும் வேண்டும். ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக லால்குடி தொகுதியில் எந்த முன்னேற்றமும் இல்லை. லால்குடி தொகுதி அருகில் உள்ள தொகுதிகளைவிட பல்வேறு துறைகளில் பின்தங்கியுள்ளது.
இந்தநிலை மாற வேண்டுமெனில், மத்திய- மாநில அரசுகளின் திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டியதும், திட்டங்களைக் கொண்டு வந்து சேர்க்கக்கூடிய பிரதிநிதியும் அவசியம். மத்திய- மாநில அரசுகளுக்கு பாலமாக உள்ள தமாகா சார்பில் போட்டியிடும் டி.ஆர்.தர்மராஜ், மத்திய- மாநில அரசுகளின் திட்டங்களை கொண்டு வந்து சேர்ப்பார். எனவே, தர்மராஜுக்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.