திருச்செந்தூர் தொகுதி அமமுக வேட்பாளர் வடமலை பாண்டியனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்தார். 
தமிழகம்

தேர்தல் நேரத்தில் அதிமுக இரட்டை வேடம்: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

“தமிழகத்துக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்காத நிலையில், உரிய நிதியை வழங்கியதாகக் கூறி தேர்தல் நேரத்தில் அதிமுக இரட்டை வேடம் போடுகிறது” என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் பரமசிவ ஐயப்பனை ஆதரித்து நாங்குநேரி பேருந்து நிலையம் அருகே பிரச்சாரம் செய்த அவர் பேசியதாவது:

தமிழகத்தில் திமுக 5 முறை ஆட்சி செய்திருக்கிறது. இப்போது தமிழகம் எத்தனை பிரச்சினைகளை சந்திக்கிறதோ அத்தனைக்கும் திமுகவே பிள்ளையார்சுழி போட்டது. கச்சத்தீவு, காவிரி, ஹைட்ரோ கார்பன், நீட் என்று அனைத்துக்கும் திமுகவே காரணம். நீட் தேர்வை ரத்து செய்வோம், விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்த மாட்டோம் என, இப்போது வாக்குறுதி கொடுக்கின்றனர்.

தமிழகத்தில் ஜெயலலிதா இருக்கும்வரையில் மக்களுக்கு எதிரான எந்த திட்டங்களையும் அனுமதிக்கவில்லை. ஆனால், அவர் வழியில் ஆட்சி செய்வதாக கூறும் முதல்வர் பழனிசாமி மக்களுக்கு எதிரான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். தமிழகத்துக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கி வருவதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம், மதுரையில் பிரதமர் மோடியை மேடையில் வைத்துக்கொண்டு சொல்கிறார். ஆனால், தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது மத்திய அரசு தமிழகத்துக்கான நிதியை வழங்கவில்லை என்று தெரிவித்திருந்தார். இந்த ஆண்டுக்கு ஜிஎஸ்டி நிதி ரூ.15 ஆயிரம் கோடி வரவில்லை. தேர்தல் நேரத்தில் அதிமுக இரட்டை வேடம் போடுவது ஏன் என்று தெரியவில்லை. மக்களை விலை கொடுத்து வாங்க நினைக்கின்றனர் என்றார் அவர்.

இதேபோல் திருச்செந்தூரில் அமமுக வேட்பாளர் வடமலை பாண்டியனை ஆதரித்து டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்தார்.

SCROLL FOR NEXT