‘‘ஸ்டாலின் மகள் வீட்டில் சோதனை என்பது பாஜக, அதிமுக வக்கிர புத்தியை காட்டுகிறது,’’ என கார்த்தி சிதம்பரம் எம்.பி தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு தெற்குதெரு பகுதி இளைஞர்கள் ஜல்லிக்காட்டு காளை மூலம் வரவேற்பு அளித்தனர். ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மாங்குடி துண்டு அணிவித்தார். தொடர்ந்து மாங்குடியை ஆதரித்து கார்த்திசிதம்பரம் பிரச்சாரம் செய்தார்.
அதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ போன்றவை எதிர்க்கட்சிகள் மீது பாய்வதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தேர்தலில் வெற்றி பெறவுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் மகள் வீட்டில் சோதனை நடத்துவது மிகவும் துரதிஷ்டவசமானது. இது பாஜக அதிமுக வக்கிரபுத்தியைக் காட்டுகிறது.
இந்த சோதனையில் எதுவும் கிடைக்கப் போவதில்லை. இந்த சோதனை வருமானவரி அதிகாரிகளுக்கே கூச்சமாக இருக்கும். அதிமுக, பாஜக தோல்வி பயத்தால் இந்த சோதனை நடத்தப்படுகிறது.
ஆனால் அதிமுகவினர் மீதான சோதனை கண்துடைப்புக்காக மட்டுமே நடத்தப்படுகிறது. தேர்தலில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர். யோகி ஆதித்யநாத் பிரச்சாரத்திற்கு வந்தபோதே கலவரம் ஏற்பட்டது. இது தான் பாஜகவின் கலாச்சாரம். இதனை தமிழகத்தில் புகுத்தப் பார்க்கின்றனர்.
தேர்தல் ஆணையம் நடுநிலையோடு தேர்தலை நடத்த வேண்டும். தேர்தல் ஆணையம் செயல்பாடுகள் சிலசமயங்களில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
அசாமில் வாக்குப்பதிவு இயந்திரத்தை எம்எல்ஏ வாகனத்தில் கொண்டு சென்றது ஏன் ? என்ற சந்தேகம் வருகிறது. வாக்குப்பதிவு இயந்திரம் நம்பகத்தன்மை கொண்டது. அதில் குளறுபடியும் செய்ய முடியாது. தேர்தலில் மக்கள் சந்தேகமின்றி வாக்களிக்கலாம், என்று கூறினார்.