தமிழகம்

தேர்தல் நேரத்தில் அதிமுக இரட்டை வேடம்: நாங்குநேரி பிரச்சாரத்தில் டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

அ.அருள்தாசன்

தமிழகத்துக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்காத நிலையில் தற்போது உரிய நிதியை வழங்கியதாகக் கூறி தேர்தல் நேரத்தில் அதிமுக இரட்டை வேடம் போடுவதாக அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டினார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் பரமசிவ ஐயப்பனை ஆதரித்து நாங்குநேரி பேருந்து நிலையம் அருகே பிரச்சாரம் செய்த அவர் பேசியதாவது:

தமிழகத்தில் திமுக 5 முறை ஆட்சி செய்திருக்கிறது. இப்போது தமிழகம் எத்தனை பிரச்சினைகளை சந்திக்கிறதோ அத்தனைக்கும் திமுகவே பிள்ளையார்சுழி போட்டது.

கச்சத்தீவு, காவிரி, ஹைட்ரோகார்பன், நீட் என்று அனைத்துக்கும் திமுகவே காரணம். அனைத்தையும் செய்துவிட்டு இப்போது நீட் தேர்வை ரத்து செய்வோம், விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்த மாட்டோம் என்றெல்லாம் திமுக வாக்குறுதி கொடுத்துக்கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் ஜெயலலிதா இருக்கும்வரையில் மக்களுக்கு எதிரான எந்தத் திட்டங்களையும் அனுமதிக்கவில்லை. ஆனால் அவர் வழியில் ஆட்சி செய்வதாக சொல்லும் முதல்வர் பழனிசாமி மக்களுக்கு எதிரான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த வழிவகுத்து கொடுத்துவிட்டார்.

மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக இருந்தால் தமிழகத்துக்கு நல்லது என்று தெரிவித்து வருகிறார்.

தமிழகத்துக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கி வருவதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம், மதுரையில் பிரதமர் மோடியை மேடையில் உட்கார வைத்துக்கொண்டு சொல்கிறார்.

ஆனால் தமிழக சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது மத்திய அரசு தமிழகத்துக்கான நிதியை வழங்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்த ஆண்டுக்கு ஜிஎஸ்டி நிதி ரூ.15 ஆயிரம் கோடி வரவில்லை. இவ்வாறு தேர்தல் நேரத்தில் அதிமுக இரட்டை வேடம் போடுவது ஏன் என்று தெரியவில்லை. இது மக்கள் ஆட்சி இல்லை. மக்களை ஆடுமாடுகள்போல் நினைக்கிறார்கள்.

மக்களை விலை கொடுத்து வாங்க நினைக்கிறார்கள். இதை மக்கள் உணர வேண்டும். தமிழகத்தில் நேர்மையான ஆட்சி அமைய மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT