அண்ணாமலை: கோப்புப்படம் 
தமிழகம்

சர்ச்சைப் பேச்சு; அண்ணாமலை மீது அரவக்குறிச்சி போலீஸார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு

க.ராதாகிருஷ்ணன்

அண்ணாமலையின் சர்ச்சைப் பேச்சு வீடியோ தொடர்பாக அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி அளித்த புகாரின் பேரில் அண்ணாமலை மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை தாக்கிப் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில கடந்த இரு நாட்களாக வைரலானாது.

அரவக்குறிச்சி தொகுதி, ஆண்டிபட்டிகோட்டை அருகேயுள்ள பூமதேவம் பகுதியில் நேற்று முன்தினம் (மார்ச் 31) வாக்குச் சேகரித்தபோது அண்ணாமலை பேசிய அந்த வீடியோவில், "திமுகவின் செந்தில் பாலாஜியை தூக்கிப் போட்டு மிதித்தால் பல் எல்லாம் வெளியே வந்துவிடும். நான் இங்குள்ள திமுகவினருக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். நான் வன்மத்தைக் கையில் எடுக்கத் தயாராக இல்லை. அகிம்சைவாதியாக அரசியல் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அது கர்நாடக முகம். அதைக் காட்ட வேண்டாம் என்று நினைக்கிறேன்" எனப் பேசினார்.

அவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி விமர்சனத்துக்கு உள்ளானது. அவரை, மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழியும் கண்டித்திருந்தார்.

அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு

இந்த வீடியோ தொடர்பாக, அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், கரூர் தொகுதி திமுக வேட்பாளரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி நேற்று அளித்த புகாரின்பேரில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுதல் (153), கொலை மிரட்டல் (506/1), தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது இன்று (ஏப்.02) வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT