அரசியல் லாபத்துக்காக வருமான வரித்துறையை ஏவல் துறையாக மத்திய பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது என்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக, அவர் இன்று (ஏப். 02) வெளியிட்ட அறிக்கை:
"திருவண்ணாமலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 25-ம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்தநிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், தனது அரசியல் லாபத்துக்காக வருமான வரித்துறையை ஏவல் துறையாக மத்திய பாஜக அரசு பயன்படுத்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரையின் சென்னை நீலாங்கரை வீடு, மருமகன் சபரீசனுக்குச் சொந்தமான 5 இடங்கள், அண்ணா நகர் எம்எல்ஏவும், திமுக வேட்பாளருமான மோகனின் மகன் கார்த்திக் வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவது கடும் கண்டனத்துக்குரியது.
மு.க.ஸ்டாலின்தான் முதல்வராக வருவார் என்று பல்வேறு கருத்துக் கணிப்புகளில் மக்கள் தெள்ளத் தெளிவாக கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, தேர்தலில் தோல்வி பயம் தெரிவதாலேயே வருமான வரித்துறை மூலம் சோதனை நடத்தி அச்சுறுத்தலாம் என்று நினைக்கின்றனர்.
அதிமுக அமைச்சர்கள் செய்த ஊழல்களை ஆதாரத்துடன் பட்டியலிட்டு ஆளுநரிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்தும், இதுவரை நடவடிக்கை இல்லை. தேர்தலில் வாக்களிக்க அதிமுகவினர் பணம் கொடுப்பதை கையும் களவுமாகப் பிடித்துக் கொடுத்தும் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதையெல்லாம் தமிழ்நாடு மக்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
தேர்தல் நெருங்கும் வேளையில் வருமான வரித்துறை மூலம் சோதனை நடத்துவது திமுக தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியையும் அதிமுக - பாஜக கூட்டணிக்கு படுதோல்வியையும் கொடுக்கும். அதிமுக கூட்டணி ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியாது என்பதற்கு இந்த வருமான வரித்துறை சோதனையே சாட்சி".
இவ்வாறு காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.