வருமான வரி சோதனைக்கு திமுக அஞ்சாது எதிர்த்து நிற்கும். மோடி, அமித் ஷாவின் பகல் கனவு பலிக்காது என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை தொடர்பாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி புதுச்சேரியில் இன்று கூறியதாவது:
”திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் வீட்டில் வருமான வரி சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது. தோல்வி பயத்தால் பாஜக, வருமான வரித்துறையை ஏவிவிட்டு, ஸ்டாலின் குடும்பத்துக்குக் களங்கம் விளைவித்து, மக்கள் மத்தியில் தவறான கருத்து பரப்பவே இந்த சோதனையை நடத்துகிறது. பாஜக எதிர்க்கட்சிகளை திட்டமிட்டுப் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது.
எதிர்க்கட்சித் தலைவர்களின் குடும்பங்கள் பெயருக்குக் களங்கம் விளைவிக்க தேர்தல் நேரத்தில் இந்த வேலையைச் செய்கிறார்கள். இது பாஜகவுக்குக் கைவந்த கலை. ஸ்டாலின் மகள் வீட்டில் சோதனை செய்ததை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். தேர்தல் நேரத்தில் நடக்கும் இச்சோதனையின் உள்நோக்கம் மக்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
பல சோதனைகளை திமுக கண்டுள்ளது. அவர்கள் அஞ்சப்போவதில்லை. எதிர்த்து நிற்பார்கள். நீதி, நியாயம் வெல்லும். திமுக கூட்டணி வெல்லும். ஸ்டாலின் முதல்வராவார். பழிவாங்கும் நடவடிக்கையை மோடியும், அமித் ஷாவும் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
பாஜகவும், அதிமுகவும் தோல்வியை ஒப்புக்கொண்டுதான் வருமான வரித்துறையை தேர்தல் நேரத்தில் ஏவி களங்கம் விளைவிக்கின்றன. இதனை தமிழக, புதுச்சேரி மக்கள் ஏற்க மாட்டார்கள். அடுத்து திமுக ஆட்சிக்கு வருவதைத் தடுக்கவும், களங்கம் விளைவிக்கவே இதைச் செய்கிறார்கள். மோடி, அமித் ஷாவின் பகல் கனவு பலிக்காது”.
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.