திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுவதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, முத்தரசன் இன்று (ஏப்.02) வெளியிட்ட அறிக்கை:
"திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீடு மற்றும் அலுவலகங்களில் மத்திய அரசின் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்திக் கொண்டிருக்கின்றனர். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியை மக்கள் உறுதி செய்து விட்டனர்.
பாஜக - அதிமுகவின் தோல்வி பயத்தினால், திமுக மீது அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடன், தனது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி மத்திய பாஜக அரசு பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற இருக்கும் நேரத்தில், களப்பணி செய்யவிடாமல் தடுப்பதற்காகவும், வாக்காளர்களிடம் சந்தேகத்தை விதைக்கும் நோக்கத்தோடும் செய்யப்படும் மத்திய மோடி அரசின் இந்த நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது.
சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்தவிடாமல், ஜனநாயக விரோதமாக மேற்கொள்ளப்படும் இந்த சோதனை நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் தலையிட்டுத் தடுக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்கள், பாஜகவின் இந்தத் தந்திர நடவடிக்கைகளை எல்லாம் நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். பாஜக - அதிமுக கூட்டணியைத் தோற்கடித்து, திமுக தலைமையிலான கூட்டணியைப் பெரு வெற்றியடையச் செய்வார்கள்".
இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.