''அதிமுக அதன் கூட்டணியினர் எவ்வளவு தாராளமாக பணப்புழக்கத்தைச் செய்கிறார்கள் என்பதை ஊரறிந்த உண்மை. ஆனால், 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இல்லாத எதிர்க்கட்சியினர் வீட்டில் போய் ரெய்டு செய்வது மிக மோசமான அநாகரிகமான ஒரு நடவடிக்கை'' என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு விசிக தலைவர் திருமாவளவன் இன்று அளித்த பேட்டி:
“ஆளும் கட்சிகளான அதிமுகவும், பாஜகவும் தேர்தல் தோல்வி பயத்தில் இன்றைக்கு திமுகவை அதன் கூட்டணிக் கட்சிகளை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருமுகமாகத்தான் திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை, மருமகன் இல்லங்களில் வருமான வரித்துறை சோதனை என்ற பெயரில் ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார்கள்.
இந்த அச்சுறுத்தலுக்கு திமுகவும், திமுக கூட்டணிக் கட்சிகளும் ஒருபோதும் பணியாது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். இத்தகைய அச்சுறுத்தல் நடவடிக்கைகளால் திமுகவின் பணிகள் பின்தங்கிவிடும் என்று எண்ணினால் அவர்கள் எண்ணம் ஏமாற்றத்தில் தான் முடியும்.
தமிழ்நாட்டு மக்கள் இத்தகைய போக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தலில் உரிய பாடத்தை அவர்கள் கற்பிப்பார்கள். இவ்வாறு அச்சுறுத்தும் போக்கை அவர்கள் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இந்தப் போக்கை விசிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதிமுக அதன் கூட்டணியினர் எவ்வளவு தாராளமாக பணப் புழக்கத்தைச் செய்கிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை. தேர்தல் ஆணையமும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள இதுபோன்ற வருமான வரித்துறை சோதனைகள் செய்யும் துறைகளுக்கு இது தெரியாமல் இல்லை.
ஆனால், 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இல்லாத எதிர்க்கட்சியினர் வீட்டில் போய் ரெய்டு செய்வது மிக மோசமான அநாகரிகமான ஒரு நடவடிக்கை. இந்த போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதனால் திமுகவின், திமுக கூட்டணிகளின் வெற்றி ஒருபோதும் பாதிக்காது”.
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.