சென்னை, புறநகர் பகுதிகளில் வெள்ளம் வடியத் தொடங்கியதையடுத்து மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த முப்படை வீரர்களும் விடுவிக்கப்பட்டு முகாம்களுக்கு திரும்பி அனுப்பப்பட்டனர். நிவாரண முகாம்களில் தங்கியிருந்த மக்களும் தங்கள் வீடுகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து சென்னையில் சில நாட்களாக மழை பெய்துவந்தது. இந்நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கடந்த 15-ம் தேதி முழுவதும் இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்ததில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறின. குடியிருப்பு பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின.
ஏரிகள் நிரம்பி, உபரி நீர் வெளியேறியதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மீட்புப் பணியில் தமிழக போலீஸார், தீயணைப்புத் துறையினருடன் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டனர்.
தாம்பரம், முடிச்சூர், வேளச்சேரி உள்ளிட்ட பல பகுதிகள் தீவுகளாக மாறின. மேற்கு தாம்பரத்தில் உள்ள அன்னை அஞ்சுகம் நகர், சிபிஒ காலனி, மூகாம்பிகை நகர், சமத்துவ பெரியார் நகர், வரதராஜபுரம் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. சில இடங்களில் முதல் மாடி வரைக்கும் தண்ணீர் தேங்கியது. இதனால், அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது..
இதையடுத்து, மீட்புப் பணிக்கு ராணுவ உதவியை தமிழக அரசு கோரியது. ராணுவத்தினர், கப்பற்படையினர், கடலோர காவல் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். வீடுகளில் சிக்கியிருந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர். ஆம்புலன்ஸ் வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக மழை ஓய்ந்திருந்ததால் சென்னை, புறநகர்ப் பகுதிகளில் தேங்கிய தண்ணீர் மெல்ல மெல்ல வடியத் தொடங்கியது. வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, கீழ்க்கட்டளை, தாம்பரம், முடிச்சூர் ஆகிய பகுதிகளில் மழை நீர் படிப்படியாக வடிந்து வருகிறது.
வேளச்சேரி மெயின்ரோடு, பள்ளிக்கரணை மேம்பாலம் ஆகிய பகுதிகளில் புகுந்த மழை நீரால் கடந்த ஒரு வாரமாக போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது அப்பகுதிகளில் மழை நீர் வடிந்துள்ளதால், போக்குவரத்து ஓரளவுக்கு சீராகி வருகிறது. மடிப்பாக்கத்தில் சதாசிவ நகர், சீனிவாச நகர், குபேர நகர், ராம் நகர் ஆகிய பகுதிகளின் குடியிருப்புகளில் மழைநீர் வடிந்துவிட்ட நிலையில், சாலைகளில் மட்டும் ஒரு சில இடங்களில் நீர் தேங்கி நிற்கிறது.
வெள்ளம் வடியத் தொடங்கியதையடுத்து, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த முப்படை வீரர்கள் விடுவிக்கப்பட்டு, இன்று தங்களது முகாம்களுக்கு திரும்பினர். அதேபோல நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த பொதுமக்களும் தங்கள் வீடுகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். தெருக்கள், தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள நீரை வெளியேற்ற தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் ஒரு சில பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியாமல் உள்ளது. அங்கு தொடர்ந்து நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மீண்டும் மழைக்கு வாய்ப்பு
இதற்கிடையே, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:
வங்கக் கடலில் ஆந்திரம் அருகே நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்து வருகிறது. தமிழகத்தில் தற்போதைக்கு புதிய புயல் எதுவும் உருவாக வாய்ப்பில்லை. ஆனால், தமிழகத்தில் காற்று மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதன்காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யக் கூடும். சென்னையில் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது
இவ்வாறு அவர் கூறினார்.
நவ.22 வரை விடுமுறை
மழை ஒய்ந்தபோதும், தண்ணீர் வடியாதது, மின்சாரம் துண்டிப்பு, போக்குவரத்து நிறுத்தம் போன்ற பல காரணங்களால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 22-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.