தமிழகம்

ஸ்டாலின் மருமகன் சபரீசன், நண்பர்கள் இல்லங்களில் வருமான வரித்துறை சோதனை

செய்திப்பிரிவு

திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மற்றும் அவரது நண்பர்கள் வீடு உட்பட 8 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் மநீம பொருளாளர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது, திருவண்ணாமலை திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

அதில் வருமானத்தில் காட்டாமல் 25 கோடி ரூபாய் வருவாயை மறைத்ததாக வருமான வரித்துறை தரப்பில் கூறப்பட்டது. தன்னை 2 நாட்கள் முடக்கியதைத் தவிர வேறு எதையும் வருமான வரித்துறை செய்யவில்லை, இது அடிப்படை உரிமையில் கை வைக்கும் செயல் என எ.வ.வேலு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எதிர்க்கட்சியினர் வீடுகளில் சோதனை செய்வது அரசியல் பழிவாங்கல் எனக் குற்றம் சாட்டியுள்ள திமுக, தேர்தல் ஆணையத்தில் புகாரும் அளித்தது. அதே நேரம் அமைச்சர் எம்.சி.சம்பத் சம்பந்தப்பட்ட இடங்களிலும் சோதனை நடந்தது. இத்தகைய சோதனைகள் அனைத்தும் ஆளுங்கட்சியினர் இல்லங்களில் நடப்பதில்லை என்பது திமுகவின் குற்றச்சாட்டாக இருந்து வந்தது.

இந்நிலையில் இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசனின் நீலாங்கரை இல்லத்தில் சோதனை நடந்து வருகிறது. இவர் ஸ்டாலின் மகள் செந்தாமரையின் கணவர் ஆவார். இதுவல்லாமல் திமுகவின் தலைமைக்கு ஆதரவாகத் தேர்தலில் பல பணிகளைச் செய்து வருகிறார். இவரது இல்லத்தில் ஐபேக்கின் அலுவலகமும் இயங்கி வருகிறது.

சபரீசன் இல்லத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடக்கும் அதே நேரத்தில் திமுக ஐடி பிரிவின் மாநிலத் துணைச் செயலாளரும், அண்ணாநகர் திமுக வேட்பாளர் மோகனின் மகனுமான கார்த்திக் மோகன் சம்பந்தப்பட்ட இடத்திலும், ஜி.ஸ்கொயர் நிறுவன உரிமையாளர் ஜி.ஸ்கொயர் பாலா இல்லத்திலும் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்துகின்றனர்.

இத்தகைய நடவடிக்கைகள் தேர்தல் பழிவாங்கும் நடவடிக்கைகள் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் வேளையில், தேர்தலுக்கு இடையில் சில நாட்களே உள்ள நிலையில் இந்த ரெய்டு நடப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT