புதுச்சேரியைப்போல் தமிழகத்தையும் மாற்றுவதற்கு பாஜக முயற்சிக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபிமனோகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட அவர் நாங்குநேரியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் திமுக தலைமையில் மதசார்பற்ற கூட்டணி அமைந்துள்ளது. அதேநேரத்தில் எதிர்முனையில் தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் செய்த ஊழல்களால் அவர்களை அடிபணிய வைத்து பாஜக கூட்டணி அமைத்துள்ளது. தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு மக்களவை உறுப்பினர் கூட கிடையாது.
ஆனாலும் தமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு பாஜக ஆட்சி நடத்துகிறது. புதுச்சேரியைப்போல் தமிழகத்தையும் மாற்றுவதற்கு பாஜக முயற்சிக்கிறது. தேர்தல் ஆணையம், வருமானவரித்துறை ஆகியவற்றை தனது கையில் வைத்துக்கொண்டு சட்டத்துக்கு புறம்பாக எதிர்க் கட்சிகளையும், எதிர்க்கட்சி தலைவர்களையும் பாஜக மிரட்டுகிறது.
ஆனால் தமிழகத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள், குடியுரிமை திருத்த சட்டம் போன்றவற்றால் மக்களிடம் பாஜகவும், அதிமுகவும் வெறுப்பை சம்பாதித்துள்ளன.
தமிழகத்தில் பொருளாதாரம் மிகவும் சீரழிந்துவிட்டது. வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படவில்லை. 10 ஆண்டுகளுக்குமுன் தொடங்கப்பட்ட நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தை செயல்படுத்துவதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் அதிமுக அரசு எடுக்கவில்லை.
இப்பகுதியில் எவ்விதமான வளர்ச்சி திட்டங்ககளையும் செயல்படுத்தவில்லை. வாழை விவசாயம் அதிகம் நடைபெறும் இப்பகுதியில் அதை பாதுகாக்கும் குளிர்பதன கிடங்கு வசதிகளையும் ஏற்படுத்தவில்லை. இதுபோல் தமிழகம் முழுவதும் வளர்ச்சிக்கான திட்டங்களை அதிமுக செயல்படுத்தவில்லை.
இந்த தேர்தல் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். வ.உ.சி., ராஜாஜி, பெரியார், காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் வாழ்ந்த தமிழகத்தில் பாஜகவை மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள் என்று தெரிவித்தார்.