தொகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருவோம். உங்கள் தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்வோம் என்று வாக்குறுதி அளித்து வாக்கு சேகரிப்பவர்கள் மத்தியில், தனது அம்மா சுபமங்களம் டெல்லிபாபு வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றால், தாங்கள் மருத்துவர் ஆனதும் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை அளிப்போம் என்று அவரது மகள்கள் ரசிகா, சுவேதா வீடு, வீடாகச் சென்று வாக்குறுதி அளித்து வாக்கு சேகரிப்பது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வில்லிவாக்கம் தேமுதிக வேட்பாளர் சுபமங்களத்தின் மகள்கள் ரசிகா, சுவேதா ஆகியோர் நீட் தேர்வில் வெற்றி பெற்று சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படித்து வருகின்றனர். வீட்டிலும், வெளியே செல்லும் போது கார் ஓட்டிச் செல்வது என பல வகையிலும் அம்மாவுக்கு உதவியாக இருந்து வரும் இவர்கள், அம்மா வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுவதால் தேர்தல் பிரச்சாரத்திலும் தனது நண்பர்களோடு சேர்ந்து வாக்கு சேகரித்துவருகின்றனர். அம்மாவுக்காக அயனாவரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் செல்லும் இவர்கள், துண்டுப் பிரசுரம் வழங்கி தனது அம்மாவுக்கு வாக்களிக்கக் கோருவதுடன், அம்மா வெற்றி பெற்றால், அவருடன் இணைந்து இத்தொகுதியில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு நாங்கள் மருத்துவர் ஆனதும் இலவசமாக மருத்துவ சேவை வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்து வாக்கு சேகரிக்கின்றனர்.
வீடு, வீடாக வாக்கு சேகரிப்பதுடன் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தியும் இளம் தலைமுறையினரின் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். அம்மாவுடன் இணைந்தும், பல நேரங்களில் நண்பர்களுடன் சேர்ந்து தனியாகவும் வாக்கு சேகரிப்பது மக்களை குறிப்பாக இளம் வாக்காளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.