கமல்ஹாசன் அரசியலில் பொறுமை, பக்குவம் பெறவில்லை என கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் பெருமைப்படும் வகையில் திரைத்துறையில் பல சாதனைகள் புரிந்த நடிகர் ரஜினிகாந்தின், பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு அவருக்கு தாதா சாகிப் பால்கே விருது வழங்கியுள்ளது. ஆன்மிக அரசியல் என்ற மக்கள் விரும்பும் அரசியலை முன்னெடுக்க முடிவு செய்த, ரஜினிகாந்த் பின்னர் உடல்நிலையைக் காரணம் காட்டி அதை கைவிட்டது மக்களுக்கு ஏமாற்றம் அளித்தது. தற்போது பொருத்தமான நபருக்கு விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாஜக அதை வரவேற்கிறது.
யாகாவாராயினும் நா காக்க என்ற திருக்குறளை உதாரணம் காட்டிய மக்கள் நீீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு, தன் கட்சியினர் பாஜக வேட்பாளரான என்னை துக்கடா அரசியல்வாதி என விமர்சனம் செய்யும் போது ஏன் திருக்குறள் ஞாபகத்துக்கு வரவில்லை.
பிரச்சாரத்தின் போது, ‘மைக்’ சரிவர வேலை செய்யாததால் கோபப்பட்ட கமல்ஹாசன், வேனில் இருந்த ஊழியர் மீது டார்ச் லைட்டை வீசிய நிகழ்வு, அரசியலில் அவர் பொறுமை, பக்குவம் பெறவில்லை என்பதையும், சிறிய ஏமாற்றத்தைக் கூடத் தாங்கி கொள்ள முடியாதவர் என்பதையும் காட்டுகிறது. தேர்தலில் வெற்றி, தோல்வி என மக்கள் எதைத் தந்தாலும், அவர்களுக்காக தொடர்ந்து உழைப்பது தான் அரசியலுக்கான அடிப்படை. கமல்ஹாசன், நீண்ட காலம் அரசியலில் பயிற்சி எடுக்க வேண்டும்.
கோவை அமைதிப் பூங்காவாக திகழ வேண்டும் என அனைத்து தரப்பினரும் முயற்சிக்கின்றனர். பாஜக அனைத்து தரப்பு மக்களுக்குமான கட்சி. கோவையில் பதற்றத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்யவில்லை. கோவையில் உத்தரபிரதேச முதல்வர் பங்கேற்ற ஊர்வலத்தின் போது நடந்த கல் வீச்சு சிறு சம்பவம். பெண்களை இழிவாகப் பேசிய உதயநிதி ஸ்டாலின், திண்டுக்கல் லியோனியை திமுக தலைமை ஏன் கண்டிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.