தமிழகம்

ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி யாருக்கு? - அதிமுக, திமுக கட்சிகளுக்கிடையே கடும் போட்டி

செய்திப்பிரிவு

தமிழகத்தின் மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகமான காசிமேடு துறைமுகம் அமைந்துள்ள ஆர்.கே.நகர் தொகுதியில், மீனவர்கள் மற்றும் மீன்பிடித் தொழில் சார்ந்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர்.

மக்கள் அடர்த்தி மிகுந்த, குறுகியதெருக்களைக் கொண்ட இத்தொகுதியில், பிரச்சினைகளுக்குப் பஞ்சமில்லை. பெரம்பூர் தொகுதியில் இருக்கும் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கால், இத்தொகுதி மக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

தண்டையார்பேட்டை வ.உ.சி. நகர், சேனியம்மன் கோயில் தெரு, கிராஸ் ரோடு, கொடுங்கையூர் எழில் நகர், சுனாமி குடியிருப்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறுமழைக்கே வீடுகளை மழைநீர்சூழ்ந்து விடுகிறது. கழிவுநீர் கட்டமைப்புகளும் மேம்படுத்தப்படவில்லை. அதனால், இப்பகுதிகள் சுகதாரக்கேட்டின் பிடியில் சிக்கியுள்ளன.

இத்தொகுதியில் நடைபெற்ற 12 தேர்தல்களில் 7 முறை அதிமுக, தலா இருமுறை காங்கிரஸ், திமுக, ஒருமுறை சுயேச்சை (டிடிவி.தினகரன்) வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த 2001 முதல் இத்தொகுதியில் தொடர்ந்து அதிமுகவே வெற்றிபெற்று வந்துள்ளது.

இங்கு அதிமுக சார்பில் போட்டியிடும் ஆர்.எஸ்.ராஜேஷ், திமுக சார்பில் போட்டியிடும் ஜெ.ஜான் எபினேசர் ஆகியோரிடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. ஆர்.எஸ்.ராஜேஷ் கடந்த 10 ஆண்டுகளாக இத்தொகுதியில் வலம்வந்து, மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்துள்ளார். கழிவுநீர் தேக்கத்தை சரிசெய்வது, கரோனாகாலத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை முன்னின்று செய்துள்ளார்.

இத்தொகுதியில் கடந்த சில தேர்தல்களில் திமுக சார்பில் புதுமுகங்களே களமிறக்கப்பட்டு வருகின்றனர். இப்போதும், புதுமுகமான ஜெ.ஜான் எபினேசர் போட்டியிடுகிறார். இம்முறை திமுகவுக்கு வெற்றியைப் பெற்றுத் தருவேன் என்ற உறுதியுடன், திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை கூறி, இவர் வாக்கு சேகரித்து வருகிறார். மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும், அவர்களால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

ஜெயலலிதா வெற்றிபெற்று முதல்வரான இத்தொகுதியில் மீண்டும் அதிமுக வெல்லுமா அல்லது அதன் தொடர் வெற்றியை திமுக உடைக்குமா என்பதே அரசியல் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு.

SCROLL FOR NEXT