தமிழகம்

மீனாட்சியம்மன் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் :

கி.மகாராஜன்

சட்டப்பேரவைத் தேர்தல் பிரச் சாரத்துக்காக நேற்று இரவு மதுரை வந்த பிரதமர் மோடி, மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்தார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. மதுரை உட்பட 6 மாவட்டங்களில் உள்ள 37 பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக- பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதுரை அம்மா திடலில் இன்று காலை நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார்.

இதற்காக கொல்கத்தாவில் இருந்து நேற்றிரவு 7.50 மணிக்கு பிரதமர் மோடி தனி விமானத்தில் மதுரை வந்தார். அவரை விமான நிலையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் வி.கே.சிங், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் வரவேற்றனர்.

விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்ட பிரதமர் இரவு 8.40 மணியளவில் மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்றார். அவரை தக்கார் கருமுத்து கண்ணன், இணை ஆணையர் செல்லத்துரை ஆகியோர் வரவேற்றனர். கிழக்கு கோபுர வாசலில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் கோயிலுக்குள் சென்ற பிரதமர், முதலில் மீனாட்சி அம்மனையும், பின்னர் சுந்தரேஸ்வரரையும் தரிசனம் செய்தார்.

பிரதமர் வருகையை ஒட்டி மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று இரவு 7 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப் படவில்லை. கோயிலைச் சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. கோயிலுக்குள் இருந்த அனைத்து கடைகளும் மூடப்பட்டன. 3 சிவாச்சாரியார்கள் தவிர மற்ற ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.

வேட்டி, சட்டை, துண்டுடன் தமிழர் பாரம்பரிய உடையணிந்து பிரதமர் கோயிலுக்கு வந்தார். அவருக்கு கோயில் மற்றும் சிற்பங்களின் சிறப்புகளை தக்கார் மற்றும் இணை ஆணையர் விளக்கினர். தரிசனத்தை முடித்துக் கொண்டு பசுமலையில் உள்ள தாஜ் ஹோட்டலுக்குச் சென்றார். இரவில் அங்கு தங்கினார். மதுரையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெறும் அம்மா திடலுக்கு இன்று காலை 11.30 மணிக்கு பிரதமர் மோடி செல்கிறார். பகல் 12.20 வரை அம்மா திடலில் இருக்கும் பிரதமர், மதுரையில் இருந்து 12.35-க்கு ஹெலிகாப்டரில் கேரள மாநிலம் பத்தனம்திட்டா செல்கிறார். அங்கிருந்து 2.50-க்கு ஹெலிகாப்டரில் நாகர்கோவில் செல்கிறார். நாகர்கோவில் பொதுக்கூட்டம் முடிந்ததும், மாலை 5.05-க்கு ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து டெல்லி செல்கிறார்.

SCROLL FOR NEXT