பெரியகுளத்தில் திமுக வேட்பாளர் சரவணக்குமாரை ஆதரித்து பேசிய கனிமொழி எம்.பி. 
தமிழகம்

மக்களுக்காக எதையும் செய்யாதவர் துணை முதல்வர்: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

மக்களுக்காக எதையும் செய்து தராதவராக துணை முதல்வர் உள்ளார் என்று திமுக மாநில மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

பெரியகுளத்தில் திமுக வேட்பாளர் கே.எஸ்.சரவணக் குமாரை ஆதரித்து கனிமொழி எம்.பி. பிரச்சாரம் செய்தார். காந்தி சிலை அருகே அவர் பேசியதாவது:

ரேஷனில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் தரமாக இல்லை. குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. துணை முதல்வர் நினைத்தால் இதுபோன்ற அத்தனை பிரச்சினைகளையும் சரி செய்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. ஊரே குடிநீர் பற்றாக்குறையில் இருந்தபோது, லட்சுமிபுரத்தில் ராட்சதக் கிணறு அமைத்து அந்த நீரை தன் தோட்டங்களுக்குப் பயன் படுத்தினார்.

மக்களுக்காக எதையும் செய்து தராத துணை முதல்வராகத்தான் அவர் இருக்கிறார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் என்றார். தர்மயுத்தம் நடத்தினார். ஆனால் இதற்காக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷனுக்கு அவர் ஒத்துழைக்கவில்லை. ஜெயலலிதாவையே மறந்து விட்டவர், தொகுதி மக்களையா நினைவில் வைத்திருப்பார்.

தற்போது போட்டித் தேர்வு களில் வெளிமாநிலத்தவர் பங் கேற்று வேலை பெறும் நிலை உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும் சட்டங்கள் மாற்றப்பட்டு அரசுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழர்களுக்கே வழங்கப்படும். இளைஞர்களுக்கு சுயஉதவிக்குழுக்கள் ஏற்படுத்தப் படும்.

இப்பகுதியில் வவ்வால்துறை அணை, குளிர்பதனக் கிட்டங்கி, மாம்பழக்கூழ் தொழிற்சாலை, முருங்கை பூங்கா, வீரப்ப அய்யனார் கோயில் பகுதியில் நீர்தேக்கம் உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத் தொடர்ந்து போடி, கம்பம், ஆண்டிபட்டி ஆகிய தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்தார்.

SCROLL FOR NEXT