தமிழகம்

10 ஆண்டுகளாக எவ்வித வளர்ச்சியுமின்றி பின்தங்கியுள்ள மண்ணச்சநல்லூர் தொகுதியை மேம்படுத்துவதே என் கனவு: திமுக வேட்பாளர் எஸ்.கதிரவன் வாக்குறுதி

செய்திப்பிரிவு

10 ஆண்டுகளாக எவ்வித வளர்ச்சியுமின்றி பின்தங்கியுள்ள மண்ணச்சநல்லூர் தொகுதியை மேம்படுத்துவதே என் கனவு என அத்தொகுதியின் திமுக வேட்பாளர் எஸ்.கதிரவன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டி: தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் நான், மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்ற என் தந்தையும், தனலெட்சுமி சீனிவாசன் குழுமத்தின் தலைவருமான சீனிவாசனின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் தற்போது முழுநேர அரசியலுக்குள் வந்துள்ளேன்.

பாகுபாடின்றி வரவேற்பு

பிரச்சாரத்துக்குச் செல்லும் இடங்களில் கட்சியினர், பொதுமக்களிடம் நான் நடந்து கொள்ளும்முறை, அறிவிக்கும் திட்டங்கள், அன்றாட செயல்பாடுகளைக் கண்டு இப்போது சாதி, மதம், கட்சி பாகுபாடின்றி அனைவரும் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். எவ்வித எதிர்பார்ப்புமின்றி அவர்கள் செலுத்தும் இந்த அன்பு, எனக்குள் அரசியல் ஈடுபாட்டை மேலும் அதிகரித்துள்ளது.

அதிமுக ஆட்சியால் பயனில்லை

10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி நடைபெறுகிறது. அதிமுகவைச் சேர்ந்தவர்களே இத்தொகுதி எம்எல்ஏக்களாக இருந்தும், எவ்வித வளர்ச்சி பணிகளும் இல்லாமல் தொகுதி முடங்கிக் கிடக்கிறது. குடிநீர், சாலை போன்ற அடிப்படை வசதிகள் கூட மக்களுக்கு கிடைக்கவில்லை. மக்களின் ஆதரவுடன் நான் வெற்றி பெறுவேன். திமுக ஆட்சி அமையும். அதன்பின் முழு முயற்சி செய்து, மண்ணச்சநல்லூர் தொகுதியை மேம்படுத்த வேண்டும் என்பதே என் கனவு. நிச்சயம் அதை செய்து முடிப்பேன்.

மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்கள்

இப்பகுதியில் விவசாயம் செழிக்க ஏரிகள், குளங்களை சீரமைப்பதுடன், கொரம்பு அமைத்து நீர்நிலைகளுக்குத் தண்ணீர் பெற்றுத் தரப்படும். சாலை, குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். மக்களின் எதிர்பார்ப்பின்படி மண்ணச்சநல்லூரில் நிலவும் குறைந்த மின்னழுத்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மண்ணச்சநல்லூரில் புதிய பேருந்து நிலையம், பிச்சாண்டார்கோவிலில் சப்-வே, சமயபுரம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக தனிப்பாதை, மாணவர்களுக்கான நூலகம் போன்ற பல வசதிகள் மேற்கொள்ளப்படும்.

இலவச சிகிச்சை, வேலை

தனலெட்சுமி சீனிவாசன் குழும மருத்துவமனைகளில் இத்தொகுதி மக்களுக்கு கல்லீரல், சிறுநீரகம், இருதய அறுவை சிகிச்சைகள் உட்பட அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக அளிக்கப்படும். அதேபோல எங்களின் கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் இத்தொகுதியைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இங்குள்ள மக்கள் என்னை நம்புகின்றனர். அவர்களுக்கு என்றென்றும் ஆதரவாக நிற்பேன் என்றார்.

SCROLL FOR NEXT