தென்காசி, வாசுதேவநல்லூர், புளியங்குடி, கடையநல்லூர், ஆலங் குளம் பகுதிகளில் அமமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று பிரச்சாரம் செய்தார்.
புளியங்குடியில் அவர் பேசிய தாவது: தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத, துரோக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். திமுக கூட்டணியினர் எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிடலாம் என பகல் கனவு காண்கிறார்கள். திமுக வெற்றிபெறும் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்குகிறார்கள். அதை முறியடிக்க வேண்டும்.
முதியோர் உதவித்தொகை முறையாக வழங்கப்படும். ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவோம். அனைத்து சமுதாயங்களுக்கும் சம நீதி, சம உரிமை கிடைக்கச் செய்வோம்.
இந்த தேர்தலில் மாற்றத்தை கொண்டுவந்தால்தான் தமிழகம் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும்.
இலவசங்களைச் சொல்லி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். 6 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ள நிலையில் இலவசங்கள், வாஷிங் மிஷின் எப்படி கொடுக்க முடியும்? மக்களை ஏமாளியாக்க நினைக்கிறார்கள். நாங்கள் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கொடுப்போம். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தடையில்லா குடிநீர் வழங்கப்படும். நெசவாளர்களுக்குத் தேவையான உதவிகளை செய்வோம், என்றார்.