வட சென்னை பகுதிகளில் மழை நீரை அகற்றி தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சி.மகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் ஆர்.கே.நகர், பெரம்பூர், வியாசர்பாடி பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள் கூட்டம் கூட்டமாக குவிகின்றனர். வெள்ளக் காலங்களில் தண்ணீர் வெளியேறுவதற்கான பாதைகள் முழுமையாக அடைந்து விட்டன. மழைநீர் வெளியேற தொலைநோக்குப் பார்வையுடன் பெரும் திட்டம் ஒன்றை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.
தேங்கியுள்ள மழை நீர், கழிவு நீர், குப்பைகளை உடனடியாக அகற்றி தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க வேண்டும். இதற்காக தமிழக அரசும், மாநகராட்சியும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பணியில் இந்திய கம்யூனிஸ்ட் தொண்டர்கள் ஈடுபடுவர்.
இவ்வாறு மகேந்திரன் கூறினார்.