விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடியில் வைப்பாறு - அர்ஜுனா நதிஆகிய இரண்டு ஆறுகளின் குறுக்கே கடந்த 2004-ம்ஆண்டு சுமார் 100 கோடி மதிப்பீட்டில் 24 அடி கொள்ளளவு கொண்டஅணை கட்டப்பட்டது.
இதன் மூலம் தூத்துக்குடிமாவட்டம் எட்டயபுரம் வட்டம்முத்துலாபுரம் குறுவட்டம் அயன்ராஜாபட்டி, கைலாசபுரம், மாசார்பட்டி, கீழ்நாட்டுக்குறிச்சி, மேலக்கரந்தை, தாப்பாத்தி, வடமலாபுரம், அச்சங்குளம், கீழக்கரந்தை, வேடப்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள 10,500 ஏக்கர் மானாவாரி நிலங்களில் பயறு சாகுபடி மேற்கொள்ளவும், மேலக்கரந்தை, கீழ்நாட்டுக்குறிச்சி, அயன்வடமலாபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள பாசன குளங்களுக்கு தண்ணீர் வழங்கவும் வழிவகை செய்யப்பட்டது.
அணையில் இருந்து சாத்தூர் நகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்கவும் எட்டயபுரம், விளாத்திகுளம் வட்டங்களின் வைப்பாற்று படுகையில் உள்ள கிராமங்களை சேர்ந்தகுடிநீர் மற்றும் விவசாய கிணறுகளுக்கு தண்ணீர் கிடைக்க ஏதுவாக நிலத்தடிநீரை உயர்த்தவும் திட்டமிடப்பட்டது.
ஆனால், கடந்த 2004-ம் ஆண்டுமுதல் தற்போது வரை 17 ஆண்டுகளில் இருக்கன்குடி அணை இருமுறை மட்டுமே முழு கொள்ளளவை எட்டியது.
ஒருமுறைகூட பாசனத்துக்காக அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படவில்லை என இப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
அதிக மழை காரணமாக அணையில் தண்ணீர் பெருகி, உபரி நீரைதிறந்து விட்டால் கூட, வைப்பாற்றில் தண்ணீர் வராத அளவுக்கு ஆற்றில் வேலிக்கருவை மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் பொதுமக்கள், கால்நடைகளுக்கு வேண்டிய குடிநீர் கிடைப்பதில்லை.
இதுகுறித்து வைப்பாறு நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் அ.வரதராஜன் கூறியதாவது: இருக்கன்குடி அணையை பராமரிக்க முக்கியத்துவம் வழங்காததால் அணையிலிருந்து எட்டயபுரம் வட்டத்துக்கு உட்பட்ட 13 கிராமங்களில் உள்ள மானாவாரி நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு வரமுடியவில்லை.
வைப்பாற்றில் சுமார் 30 அடிவரை மணலை சுரண்டி அள்ளிவிட்டதாலும், திரும்பிய பக்கமெல்லாம் சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளதாலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.
வைப்பாற்றில் விவசாயத்துக்கு ஆதாரமாக அமைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கிணறுகள் மற்றும் ஆற்றுப்படுகையில் உள்ள 800-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள குடிநீர் கிணறுகளும் வறண்டுவிட்டன. இதனால் 100 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள தாமிரபரணி தண்ணீரையே நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், வரத்து கால்வாய்கள் பராமரிப்பின்றி காணப்படுவதால் இருக்கன்குடி அணையிலிருந்து அவ்வப்போது திறந்து விடப்படும் தண்ணீர் விளாத்திகுளம், எட்டயபுரம் பகுதிக்கு வருவதில் தடை ஏற்படுகிறது.
எனவே, இருக்கன்குடியில் இருந்து வைப்பாறு வரை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். வைப் பாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் அடர்ந்து வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும் என்றார்.