திருவண்ணாமலை மண்டித் தெரு, பஜார் வீதி மற்றும் ஜோதி மார்க்கெட் பகுதியில் பாஜக வேட்பாளர் தணிகைவேல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் மக்களுக்கு அளித்த வாக்குறுதியில், “பக்தர்களின் கோரிக்கை ஏற்று திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலுக்கு யானை வழங்கப்படும். சம்மந்தனூர் கிராமத்தில் வள்ளால மஹாராஜாவுக்கு மணி மண்டபம் கட்டித் தரப்படும். விஸ்வநாதபுரம் கிராமத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக குடிநீர் குழாய் அமைத்துத் தரப்படும்.
தி.மலை சட்டப்பேரவைத் தொகுதியில் சிப்காட், நவீன வாசன திரவிய தொழிற்சாலை, ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையம், அரசு சட்டக்கல்லூரி, அரசு மகளிர் கலைக் கல்லூரி, காய்கறிகளை சேமிக்க குளிர்சாதன கிடங்குகள் அமைத்துக் கொடுக்கப்படும். வரகூர், சே.கூடலூர், காம்பட்டு ஆகிய ஊராட்சிகளில் உள்ள ஏரிகளுக்கு சாத்தனூர் அணையில் இருந்து பாசன நீர் இணை கால்வாய் அமைத்து தரப்படும். சென்னைக்கு தினசரி ரயில் வசதி ஏற்படுத்தித் தரப்படும். தென்மாவட்டங்களுக்கு திருவண்ணாமலையில் இருந்து ரயில் வசதி செய்து தரப்படும்” என்றார்.