புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் சி.விஜயபாஸ்கரும், திமுக சார்பில் எம்.பழனியப்பனும் போட்டியிடுகின்றனர்.
தொடக்கத்தில், கடந்த கடந்த 10 ஆண்டுகளில் தான் செய்த திட்டங்களையும், வெற்றி பெற்றால் செய்ய உள்ள திட்டங்களையும் எடுத்துக்கூறி அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வாக்கு சேகரித்து வந்தார்.
இதேபோன்று, இந்த தொகுதியில் நிறைவேற்றப்படாத திட்டங்களையும், வருங்காலங்களில் செய்ய உள்ள திட்டங்களையும் எடுத்துக் கூறி திமுக வேட்பாளர் பழனியப்பன் பிரச்சாரம் செய்து வந்தார்.
ஒரு கட்டத்தில் " கடந்த 2 தேர்தல்களில் போட்டியிட்டு பொருளாதார ரீதியாக அனைத்தையும் தொகுதி மக்களுக்காக இழந்துவிட்டேன். எனக்கென இருப்பது ஒரு வீடும், ஒரு பெட்ரோல் பங்கும்தான். இந்த தேர்தலில் அவை இரண்டையும் இழந்தாலும், மக்களை இழக்க தயாராக இல்லை.
எனவே, எனக்கு ஒரு முறை வாய்ப்பு தாருங்கள்" என உருக்கமாக பேசிய திமுக வேட்பாளர் பழனியப்பன் பிரச்சாரம் செய்தார். அதோடு இவரும், வாக்காளர்களும் அழுதபடியே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திட்டங்கள் சார்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த அமைச்சரோ "நானும் கடந்த 10 ஆண்டுகளில் இந்த தொகுதியை சுமந்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளேன். இயற்கை பேரிடர் காலங்களிலும் குடும்பத்தில் ஒருவனாக இருந்திருக்கிறேன்.
எனக்கும் பிபி, சுகர் போன்ற நோய்கள் உள்ளன. எனக்கும் பல கஷ்டங்கள் இருக்கின்றன. அதை எல்லாம் தொகுதி மக்களிடம் நான் காட்டுவதில்லை. அதையும் கடந்து மக்களுக்காக நாள்தோறும் உழைத்து வருகிறேன்" எனக் கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் தொகுதி முழுக்க இருவருக்கும் ஒரு வித அனுதாப அலை வீசி வருகிறது.
இந்நிலையில், நேற்று இரவு பிரச்சாரத்தின் போது ஒரு சில வாக்குறுதிகளை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.
அதாவது, விராலிமலையில் 10 ஏக்கரில் ஜல்லிக்கட்டு காளை பராமரிப்பு நிலையம், ஆண்டுதோறும் 1000 மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் கல்லூரிகளில் இலவச படிப்பு, ஜூன் மாதத்தில் ஒரே நேரத்தில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு, அன்னவாசல், ஆவூர், குளத்தூரில் புதிய தொழிற்பேட்டை, வீட்டுக்கும் அருகில் மரம் வளர்ப்போ ருக்கு பரிசு வழங்குதல் போன்ற திட்டங்கள் இடம்பெற்றன.
இத்தகைய புதிய அறிவிப்பு குறித்து இலுப்பூரில் திமுக வேட்பாளர் எம்.பழனியப்பன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது:
விராலிமலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி செய்தவர்கள் மீது வழக்குபோடச் செய்தவர் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
காலம் காலமாக அங்கு ஊரார் நடத்தி வந்த ஜல்லிக்கட்டை தானே நடத்துவதாக மாற்றிக்கொண்டார்.
இதுவரை அவர்களது சொந்தக் கல்வி நிறுவனத்தில் ஒருவரைக்கூட இலவசமாக கல்வி பயில செய்யவில்லை.
கடந்த 10 ஆண்டுகளில் ஏன் இங்கு புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகவில்லை?.
தொகுதியில் நடத்தப்பட்ட தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் அனைத்தும் கண்துடைப்புக்காகவே நடத்தப்பட்டவை தவிர, ஒருவருக்கு கூட உத்தரவாதமான வேலை கொடுக்கவில்லை. எனவே, இந்த திடீர் அறிவிப்புகள் அனைத்தும் தோல்வி பயத்தினால் அவர் வெளியிட்டு இருக்கிறார் என்றார்.
இதையடுத்து விராலிமலை தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் கட்டத்தை எட்டியுள்ளது.