புதுச்சேரியில் தேர்தல் துறை, துணைநிலை ஆளுநர் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று (ஏப். 1) மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘‘நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்துக்காக புதுச்சேரிக்கு வந்தார். அவர் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவார், கடன் தள்ளுபடி செய்வார், மாநிலத்துக்கான மானியத்தை உயர்த்திக் கொடுப்பார், புதிய திட்டங்களை அறிவிப்பார் என்று மக்கள் எதிர்ப்பார்த்தனர்.
ஆனால், அவர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டும்தான். அதே மேடையில் கூட்டணிக் கட்சியாக இருக்கும் என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கூறினார். ஆனால் பிரதமர் அதைப் பற்றி ஒன்றும் அறிவிக்கவில்லை. இதிலிருந்து அவர்களின் கூட்டணியில் கொள்கை முரண்பாடு இருப்பது தெளிவாக தெரிகிறது.
மாநில அந்தஸ்து தொடர்பாக பிரதமர் அறிவிக்காத நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கையில் அதுபற்றிய எந்தவித அறிவிப்பும் இல்லாத நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து என்.ஆர் காங்கிரஸ் வெளியே வரத் தயாரா? பிரதமர், எங்களுடைய காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நடந்துள்ளதாகவும், நான் ஊழல் செய்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
பிரதமருக்கு நான் சவால் விடுத்துள்ளேன். நான் ஊழல் செய்திருந்தால் அந்த ஊழலை நிரூபிக்க நீங்கள் தயாரா? ஓய்வுபெற்ற அல்லது இப்போது பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய விசாரணைக்கு நான் தயாராக இருக்கிறேன். பிரதமர் சொன்ன ஊழல் புகாருக்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.
புதுச்சேரிக்கு பிரதமர், மத்திய அமைச்சர்கள் வரிசையாக வருகின்றனர். இங்கு வந்திருந்த பாஜக தேசியத் தலைவர் நட்டா புதுச்சேரியில் 23 தொகுதிகளைப் பிடித்து ஆட்சி அமைப்போம் என்றார். அவர்கள் போட்டியிடுவதே 9 தொகுதிகள்தான். எப்படி 23 தொகுதிகளைப் பிடிக்க முடியும். கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளைப் பிடிப்பார்களா?
காரைக்கால் வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ரூ.15 ஆயிரம் கோடி பிரதமர் கொடுத்தாகவும், அதனை நான் கையாடல் செய்துவிட்டதாகவும் என் மீது ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறினார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இவ்விவகாரத்தில் தேர்தல் துறை இதுவரை எந்தவித பதிலையும் எங்களுக்குக் கொடுக்கவில்லை. இது தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்க உள்ளோம். புதுச்சேரிக்குத் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்திருந்த மத்திய உள்துறை அமித் ஷா புதுச்சேரி பற்றி ஒருவார்த்தை கூட பேசவில்லை. வந்த அரை மணி நேரத்தில் புறப்பட்டுவிட்டார். இதுதான் பாஜகவின் தேர்தல் பிரச்சாரம்.
எதிர்கட்சிகளை வசைபாடுவது, இல்லாத குற்றச்சாட்டுகளைக் கூறுவது, மக்களை திசை திருப்பவதுதான் பாஜகவின் வேலை. புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிடம் புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் பிரதமர், அமித் ஷா, நட்டா ஆகியோரின் படங்கள் அச்சிடப்படாத நோட்டீஸ்களை மக்களிடம் கொடுத்து வாக்கு கேட்கிறார்.
மாநிலத்தின் தலைவர், அவர்களின் தலைமையில் உள்ள தலைவர்களின் படங்கள் இல்லாமல் பிரச்சாரம் செய்கிறார். அவர்களின் படங்களுடன் சென்று வாக்கு கேட்டால் மக்கள் அவர்களை திருப்பி அனுப்பி விடுவார்கள். இதுதான் பாஜகவின் நிலை. சிறிய மாநிலமான புதுச்சேரியில் பணபலம், அதிகார பலம், அமலாக்கப் பிரிவு, சிபிஐ அனைத்தையும் வைத்து பலரையும் மிரட்டுகின்றனர். இது பாஜகவின் அராஜகச் செயல்.
மத்திய ஆளும் கட்சியின் அதிகாரத்தால், புதுச்சேரியில் அரசியல் கட்சியினர் சுதந்திரமாக தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியவில்லை. தேர்தல் ஆணையம் பாரபட்சமாகச் செயல்படுகிறது. புதுச்சேரியில் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுமா? என்று சந்தேகம் எழுந்துள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக, தேர்தல் துறையும், நேரடியாக துணைநிலை ஆளுநரும் செயல்படுகிறனர்.’’
இவ்வாறு முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.