உத்தரப் பிரதேசத்தைப் போன்ற வன்முறையான சூழலைத் தமிழகத்திலும் உருவாக்க பாஜக முயற்சி செய்கிறது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
கோவையில் உத்தரப் பிரதேச முதல்வர் வருகையை முன்னிட்டு, கடையை மூட வலியுறுத்தி கல்வீசி தாக்குதலில் ஈடுபட்ட சம்பவத்துக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து விருதுநகரில் இன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, ''உத்தரப் பிரதேசத்தில் வன்முறைகளும், வன்கொடுமைகளும் நித்தம் நித்தம் அரங்கேறி வருகின்றன. அப்படியொரு சூழல் தமிழகத்திலும் ஏற்பட வேண்டும் என்று பாஜகவின் தேசியத் தலைவர்கள் தமிழகத்தில் முகாமிடுகின்றனர்.
கோவையில் நடந்த வன்முறை கண்டிக்கத்தக்கது. இந்த வன்முறையைச் செய்தவர்கள் பாஜகவினர் என்று மக்கள் அறிந்துள்ளனர். இதில் காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தமிழகத்தில் அதிமுகவின் ஆட்சியைப் பொறுத்தவரை அது பாஜகவுக்கு எடுபிடியாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.
நடந்தது என்ன?
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து, உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவையில் நேற்று (மார்ச் 31-ம் தேதி) பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதற்காக புலியகுளம் வந்த அவர், அங்கிருந்த வாகனப் பேரணியில் கலந்துகொண்டு, பிரச்சாரக் கூட்டம் நடக்கும், ராஜவீதி தேர்முட்டி திடலுக்கு வந்தார். அந்த இருசக்கர வாகனப் பேரணியில் வந்த வாகனங்கள், பெரியகடை வீதியில் இருந்து நேராகச் சென்று, ஒப்பணக்கார வீதியில் வலதுபுறம் திரும்பி, ராஜவீதியை அடைந்து தேர்முட்டிக்குச் சென்றனர். இருசக்கர வாகனப் பேரணியில் கலந்து கொண்ட ஒருவர், அப்பகுதியில் இருந்த கடையை மூட வலியுறுத்தி கல்வீசி தாக்கினார்.
அதைத் தொடர்ந்து கட்சிக் கொடி கட்டப்பட்டு இருந்த தடியால், சில வியாபாரிகளைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. காவல்துறையினர் அங்கு வந்ததைத் தொடர்ந்து, இருசக்கர வாகனத்தில் வந்த பாஜகவினர் அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தகவல் அறிந்த உக்கடம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.