அமைச்சர் கே.சி.வீரமணிக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேல் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அதிமுக சார்பில் 3-வது முறையாகப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக மாவட்டப் பொறுப்பாளர் தேவராஜ் போட்டியிடுகிறார். இருவரும் வெற்றிக்கனியைப் பறிக்க தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மாதம் 25-ம் தேதி தேர்தல் செலவினப் பார்வையாளர் விஜய் பஹதூர் வர்மா ஜோலார்பேட்டை தொகுதியில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே கார் ஒன்று சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்தது.
அந்த காரை தேர்தல் செலவினப் பார்வையாளர் விஜய் பஹதூர் வர்மா சோதனையிட்டபோது அதில், அதிமுக சின்னம் பொறித்த 39 டி-ஷர்ட்டுகள், அதிமுக கரை வேட்டி, 40 சிறிய துண்டுகள், பாமக சின்னம் பொறித்த 15 துண்டுகள், அதிமுக சின்னம் பொறித்த 55 விசிறிகள், 350 துண்டுப் பிரசுரங்கள் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.21 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தேர்தல் பறக்கும் படையினருக்கு தேர்தல் செலவினப் பார்வையாளர் உத்தரவிட்டார். அதன்பேரில், அங்கு வந்த தேர்தல் பறக்கும் படை அலுவலர் குமரன், காரில் இருந்த அதிமுக, பாமக சின்னம் பொறித்த பரிசுப் பொருட்களைப் பறிமுதல் செய்து நாட்றாம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
மேலும், இது தொடர்பாக ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில், அதிமுக வேட்பாளர் கே.சி.வீரமணி உட்பட அவரது ஆதரவாளர்கள் மீது தேர்தல் பறக்கும் படை அலுவலர் குமரன் புகார் அளித்தார். இதையடுத்து, ஜோலார்பேட்டை தொகுதி அதிமுக தேர்தல் பொறுப்பாளர் அழகிரி (அமைச்சர் கே.சி.வீரமணியின் சகோதரர்), கார் ஓட்டுநர், கார் உரிமையாளர், பிரிண்டிங் பிரஸ் உரிமையாளர் என 4 பேர் மீது ஜோலார்பேட்டை காவல் துறையினர் கடந்த 26-ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தேர்தல் செலவினப் பார்வையாளர் விஜய் பஹதூர் வர்மா அமைச்சர் கே.சி.வீரமணி மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை எனக் கேள்வி எழுப்பியபோது, திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேல் தலையீட்டால் அமைச்சர் கே.சி.வீரமணி மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்யவில்லை என்பது தெரியவந்தது.
இதுகுறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு ஜோலார்பேட்டை தொகுதி செலவினப் பார்வையாளர் விஜய் பஹதூர் வர்மா புகார் அளித்தார். இதையடுத்து ஜோலார்பேட்டை காவல் துறையினர் மார்ச் 27-ம் தேதி அமைச்சர் கே.சி.வீரமணி மீது தாமதமாக வழக்குப் பதிவு செய்தனர்.
இருப்பினும், தேர்தல் செலவினப் பார்வையாளர் அளித்த புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு ஆதரவாகச் செயல்பட்ட திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேலைப் பணியிடை நீக்கம் செய்ய இந்தியத் தேர்தல் ஆணையம் சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு உத்தரவிட்டது.
அதன்பேரில், திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேல் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டது.
ஏற்கெனவே, தேர்தல் விதிமீறல் புகாரில் கோவை, திருச்சி மாவட்டக் காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேல் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் காவல் துறையினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.