தமிழகம்

2 நாள் பிரச்சாரத்துக்குத் தடை; தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து ஆ.ராசா தரப்பு உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு

செய்திப்பிரிவு

முதல்வரையும், ஸ்டாலினையும் ஒப்பீடு செய்கிறேன் எனப் பிறப்பு குறித்து பேசி, சர்ச்சையில் சிக்கிய திமுக நட்சத்திரப் பேச்சாளர் ஆ.ராசா பிரச்சாரம் செய்ய 48 மணி நேரத்துக்குத் தடை விதித்தது தேர்தல் ஆணையம். இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஆ.ராசா சார்பில் அவசர முறையீடு செய்யப்பட்டது.

தமிழகத் தேர்தல் களத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. தலைவர்களே ஒருவருக்கொருவர் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுவது வாடிக்கையாக உள்ளது. அதிலும் பெண்கள் குறித்தும், பெண் வேட்பாளர்கள் குறித்தும் சர்ச்சைப் பேச்சு அதிகமாக உள்ளது.

அனைத்துக் கட்சிகளிலும் இதுபோன்ற பேச்சுகள் வாக்காளர்களையும், ஜனநாயகவாதிகளையும் முகம் சுளிக்க வைத்தது. இந்நிலையில் முதல்வர் பழனிசாமி குறித்தும், ஸ்டாலின் குறித்தும் ஒப்பீடு செய்வதாக திமுக நட்சத்திரப் பேச்சாளர் ஆ.ராசா பேசியது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. திமுக தலைமை தலையிட்டு அறிக்கை விடும் அளவுக்குச் சென்றது.

ஆனாலும், முதல்வர் பழனிசாமி இதைப் பிரச்சாரத்தில் குறிப்பிட்டுப் பேசி கண் கலங்கியதால் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து ஆ.ராசா மன்னிப்பு கோரினார். ஆனாலும், அவரது பேச்சுக்காக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தேர்தல் அதிகாரியிடமும் அதிமுக புகார் அளித்தது. புகாரின் பேரில் ஆ.ராசாவிடம் விளக்கம் கேட்க அவர் அளித்த விளக்கத்தையும், விரிவான பதில் அளிக்க தனிப்பட்ட விசாரணை வேண்டும் என்கிற கோரிக்கையையும் நிராகரித்த தேர்தல் ஆணையம், ஆ,ராசா 48 மணி நேரம் பிரச்சாரம் செய்யத் தடை விதித்தும், நட்சத்திரப் பேச்சாளர் அந்தஸ்திலிருந்து நீக்கியும் உத்தரவிட்டது.

இனிவரும் காலங்களில் முறையாகப் பேசவும் வழிகாட்டுதலை வழங்கியிருந்தது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து ஆ.ராசா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில் அவசர முறையீடு செய்யப்பட்டது. ஆ.ராசா தரப்பிலிருந்து திமுக மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் முறையீடு செய்தார்.

அவசர வழக்காக விசாரிக்கக் கோரும் முறையீட்டை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஏற்க மறுத்துவிட்டது. இதனால் இந்த வழக்கு தேர்தலுக்குப் பின் ஏப்.8 அன்று விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது. இந்நிலையில் திமுக தரப்பில் மீண்டும் நாளை முறையிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT