தமிழகம்

இதுவரை ஒரேயொரு எம்எல்ஏதான்: 20 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தலில் வெற்றிக்கணக்கை தொடங்க வேண்டிய கட்டாயத்தில் பாஜக

செ. ஞானபிரகாஷ்

இதுவரை புதுச்சேரியில் நடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்டதில் ஒரேயொரு எம்எல்ஏ மட்டுமே வென்றுள்ளார். 20 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றிக்கணக்கை தொடங்க வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது.

புதுச்சேரியில் இதுவரை 13 தேர்தல்கள் நடந்துள்ளன. கடந்த 1964, 1985, 1991, 2001, 2006, 2016 ஆறு முறை காங்கிரஸ் ஆட்சியை அமைத்துள்ளது. திமுக கடந்த 1969, 1980, 1990, 1996 ஆகிய நான்கு முறை ஆட்சியை பிடித்துள்ளது. அதிமுக 1974, 1977ல் ஆட்சியமைத்தது. கடந்த 2011-ல் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.

புதுச்சேரியில் இதுவரை நடந்த தேர்தலில் கடந்த 2001ல் ரெட்டியார்பாளையம் தொகுதியில் பாஜகவில் போட்டியிட்ட கிருஷ்ணமூர்த்தி மட்டுமே தேர்தலில் வென்றவர். அவர் அத்தேர்தலில் 11446 வாக்குகளை பெற்று வென்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர் விஸ்வநாதனை வீழ்த்தினார். அவர் பெற்ற வாக்குகள் 7985.

இதன்பின்னணியில் சுவாரஸ்ய சம்பவமும் உண்டு. இதுபற்றி பாஜக அக்காலத்து தலைவர்கள் கூறுகையில், "புதுச்சேரியில் பாஜக வளர்ச்சியடையாத காலம். அப்போது பல தேர்தலில் போட்டியிட்டு கிருஷ்ணமூர்த்தி தோல்வியை தழுவி வந்தார். பால் வியாபாரம் செய்த அவர் ஒரு அரசு நிகழ்வில் கேள்வி எழுப்பியபோது பிரச்சினை ஏற்பட்டதால் அவமானமடைந்தார். அதனால் தேர்தலில் வென்றுதான் செருப்பு அணிவேன் என்று உறுதியெடுத்தார். அதன்பின்னர் 2001 தேர்தலில் வென்ற பிறகே சட்டப்பேரவை வளாகத்துக்குள் வந்த பின்பு செருப்பு வாங்கி வந்து அணிந்தார்" என்று குறிப்பிட்டனர்.

ஆனால் 2001க்கு பிறகு பாஜக எத்தேர்தலிலும் ஒரு தொகுதிக்கூட புதுச்சேரியில் வெல்லவில்லை. மத்தியில் பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு கடந்த 2016ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக முயற்சித்தது. ஆனால் இரு கட்சிகளும் பாஜகவை விலக்கின. அத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டன. காங்கிரஸ் 30.6 சதவீத வாக்குகளும், என்.ஆர்.காங்கிரஸ் 28.1 சதவீத வாக்குகளும், அதிமுக 16.8 சதவீத வாக்குகளும், திமுக 8.9 சதவீத வாக்குகளும், பாஜக 2.4 சதவீத வாக்குகளும் பெற்றன.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முன்கூட்டியே களமிறங்கியது. காங்கிரஸில் இருந்து முக்கிய அமைச்சர், எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர். காங்கிரஸிலிருந்து பல முக்கிய நிர்வாகிகள் விலகி இணைந்தனர். முன்கூட்டியே கர்நாடகத்திலிருந்து 30 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் புதுச்சேரியில் பாஜகவின் நிலையை மேலிடத்துக்கு தகவல் தந்தனர். அதையடுத்து காய்களை மேலிடத்திலிருந்து நகர்த்த தொடங்கினர். முதலில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நீக்கப்பட்டு தமிழிசை நியமிக்கப்பட்டார். அடுத்ததாக மாநில கட்சிகளுடன் இணைந்து பாஜக தேர்தலை சந்தித்தால்தான் பலன் கிடைக்கும் என்றும் உறுதியாக தெரிவித்தனர். மேலிடப்பொறுப்பாளர்கள், மத்திய அமைச்சர், முக்கிய நிர்வாகிகள் என பலரும் புதுச்சேரியில் முகாமிட்டனர்.

மக்களிடத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் திட்டங்கள் நிறைவேறாததற்கு மாநில அரசை போல, மத்திய அரசுக்கும் பொறுப்பு என்ற கோணத்தில் மக்கள் நினைப்பதை உறுதிப்படுத்தினர். இதையடுத்து புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் பாஜகவுடன் கடந்த முறை விலகி சென்ற என்.ஆர்.காங்கிரஸையும், அதிமுகவையும் பலக்கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு கொண்டு வந்தனர். அதைத்தொடர்ந்து முக்கிய மத்திய அமைச்சர்கள் தொடங்கி பலரும் புதுச்சேரிக்கு வரிசையாக வந்து பாஜகவின் செயல்பாட்டை உறுதிப்படுத்த தொடங்கினர்.

முக்கியப் பொறுப்பாளர்கள் தரப்பில் விசாரித்தபோது, "20 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக இம்முறை முக்கிய கட்சியாக புதுச்சேரியில் இடம்பெறும் வகையில் தொடர் பணிகளை தொகுதிவாரியாக செய்துள்ளோம். தேர்தலில் போட்டியிடும் 9 தொகுதிகளிலும் தொடர்ந்து தினந்தோறும் நிலவரங்களை பட்டியலிட்டு பணியாற்றுகிறோம். மேலிடத்தில் புதுச்சேரி நிலவரத்தை உற்று நோக்குகின்றனர்" என்று குறிப்பிட்டனர்.

புதுச்சேரியில் பாஜகவை பலப்படுத்துவதன் மூலம் தமிழகத்தில் வடமாவட்டங்கள், காரைக்காலையொட்டி காவிரி டெல்டா பகுதிகள், மாஹேயொட்டி கேரளம், ஏனாமையொட்டி ஆந்திரம் என நான்கு மாநிலங்களில் பத்து எம்.பி. தொகுதிகளில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த முடியும் என்றும் பாஜக மேலிடம் கணக்கிடுகிறது. அதனால் வெற்றிக்கணக்கை துவக்க வேண்டிய நெருக்கடியிலுள்ளது பாஜக- புதுச்சேரியின் நீண்ட நாள் கோரிக்கையான மாநிலஅந்தஸ்து, நிதிக்குழுவில் புதுச்சேரியை சேர்ப்பது, கடன் தள்ளுபடி என்ற முக்கிய கோரிக்கைகளை தீர்ப்பதற்கான உறுதியை தரவேண்டிய கட்டாயத்திலும் பொறுப்பிலும் பாஜக உள்ளது. ஆனால், தேர்தல் அறிக்கையிலும், பிரதமர் புதுச்சேரி வந்தபோதும் இதற்கான உறுதி தரப்படவில்லை. இது முக்கிய விவாத பொருளாகியுள்ளது.

மேலிடப்பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவிடம் கேட்டதற்கு, "கூட்டணிக்கட்சியில் இக்கருத்தை தெரிவித்தனர். கண்டிப்பாக மத்திய அரசு இக்கோரிக்கைகளை கவனத்தில் எடுத்துக்கொள்ளும்" என்று குறிப்பிடுகிறார்.

பாஜக எதிரேயுள்ள கோரிக்கையையும், எதிர்க்கட்சிகளின் பிரச்சார சவாலையும் சமாளிக்குமா என்பதன் பதில் விரைவில் தெரியும்.

SCROLL FOR NEXT