குமரகுரு அடிகளாரைச் சந்தித்த கமல். 
தமிழகம்

சிரவை ஆதீனம் குமரகுரு அடிகளாரைச் சந்தித்து ஆதரவு கோரிய கமல்

செய்திப்பிரிவு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று சிரவை ஆதீனம் குமரகுரு அடிகளாரைச் சந்தித்து தேர்தலில் வெற்றி பெற ஆதரவு கோரினார்.

கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அத்தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பாக வானதி சீனிவாசனும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர்.

கடும் போட்டி நிலவுவதால், கோவையில் தொடர் பிரச்சாரங்களை கமல் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், கமல்ஹாசன் இன்று (ஏப்.1) சிரவை ஆதீனம் குமரகுரு அடிகளாரைச் சந்தித்து தேர்தலில் வெற்றி பெற ஆதரவு கோரினார்.

இது தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கோவை தெற்கில் போட்டியிடும் கமல்ஹாசனிடம் குமரகுரு அடிகளார் தனது மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். பின்னர் அவர் இன்றைய காலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல், கல்வி வியாபாரமாக மாறிவிட்டது மிகவும் வேதனையளிக்கிறது. உங்களுடைய செயல்பாடுகள் நல் மாற்றத்திற்கானதாய் இருக்கிறது.

கல்விக்காக உங்கள் குரல் தொடர்வது சிறப்பு. தொடர்ந்து ஒலிக்க வேண்டும். உங்கள் செயல்பாடுகளைக் கவனித்து வருகிறேன். நீங்கள் வரும் காலங்களில் இன்னும் சிறப்பாகச் செயல்பட என் வாழ்த்துகளையும், வரும் தேர்தலில் வெற்றி பெற ஆதரவையும் தெரிவித்துக் கொள்வதாக கமல்ஹாசனிடம் கூறினார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT